’ட்ரம்ப் சொல்லி தான் செய்தேன்’; குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்து மைக்கேல் கோஹன், தேர்தல் முறைகேடு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ட்ரம்ப் சொல்லி தான் இந்த குற்றங்களை செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
 | 

’ட்ரம்ப் சொல்லி தான் செய்தேன்’; குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்து மைக்கேல் கோஹன், தேர்தல் முறைகேடு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ட்ரம்ப் சொல்லி தான் இந்த குற்றங்களை செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது எதிர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க அவரது பிரச்சார அணியை சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக பேர் போன ட்ரம்ப், பெண்களை இழிவாக நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தங்களுடன் ட்ரம்ப் உறவு வைத்திருந்ததாகவும், தங்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும் பல பெண்கள் குற்றம் சாட்டினர். அதில் சிலருக்கு ட்ரம்ப்புக்கு நெருக்கமானவர்கள் பணம் கொடுத்து, வாயடைக்க முயற்சிகள் எடுத்தனர். 

இதுபோல இரண்டு பெண்களின் வாயடைக்க போடப்பட்ட ஒப்பந்தங்கள், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதால், ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதில் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், ட்ரம்ப் சார்பாக இரண்டு பெண்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. தனக்கும் கோஹன் கொடுத்த பணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், கோஹன் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தான் செய்த குற்றங்களை கோஹன் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு 4 முதல் 5 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. 

மேலும், ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், இரண்டு பெண்களுக்கு தான் நடத்தி வரும் நிறுவனத்தின் சார்பாக 1,30,000 டாலர்கள் மற்றும் 1,50,000 டாலர்கள் வழங்கியதாக கோஹன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ட்ரம்ப்புக்கு நெருக்கமான பல அதிகாரிகள் ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வழக்கறிஞரும் சிக்கியுள்ளது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் பற்றிய பல ரகசியங்களை மேற்கொண்ட விசாரணையில் கோஹன் சொல்ல வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP