பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு??

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு??
 | 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு??


பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் 2016ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 195 உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் தாங்கள் இனி, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான நடவடிக்கை எடுப்போமென உறுதியளித்ததோடு, அதற்கான கெடுவும் விதிக்கப்பட்டது. கொடுத்த கெடுவுக்குள் திட்டங்களை முடிக்காவிட்டால், அதற்காக அபராதமோ, தண்டையயோ எதுவும் கிடையாது. ஆனால்,  உலக நாடுகள் ஒன்றிணைந்து, பருவநிலை மாற்றம் உலகிற்கே ஆபத்து என ஒப்புக்கொள்ளும் ஒரு நிகழ்வாக இது கருதப்பட்டதால், அனைத்து நாடுகளும் இதில் கலந்துகொண்டன. நிகராகுவா மற்றும் போரில் பாதிக்கப்பட்ட சிரியா முதலில் இதில் கையெழுத்திடாமல் இருந்தன. இரு நாடுகளும் கடந்த வருடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

முன்னாள் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு, இந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகளை கையெழுத்திட வைக்க கடும் முயற்சி எடுத்தது. ஆனால், அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர், இந்த ஒப்பந்ததில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என கூறினார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை தண்டிப்பதாகவும், அமெரிக்க தொழில்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறினார். தனது கட்சியினர் உட்பட ஏராளமான எதிர்ப்பை மீறியும் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என கடந்த வருடம் டிரம்ப் அறிவித்தார். பருவநிலை மாற்றம் என்பது உண்மை கிடையாது என தொடர்ந்து கூறி வரும் டிரம்ப், அது விஞ்ஞானிகளும், சீனாவும் கிளப்பிவிடும் சதி என்றும் கருதுகிறார்.

இந்நிலையில், நேற்று நார்வே பிரதமரை டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரிடம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றி கேட்கப்பட்டபோது, "எனக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. எங்கள் தரப்பு அந்த ஒப்பந்தத்திற்கு வந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சேருவதற்கு வாய்ப்புள்ளது" என்றார். இதனால், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுமா, விலகாதா என வெள்ளை மாளிகை அதிகாரிகளே குழம்பிப்போய் உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP