வடகொரியாவை முதலில் தாக்க டிரம்ப் ஆலோசனை!

வடகொரியாவை முதலில் தாக்க டிரம்ப் ஆலோசனை!
 | 

வடகொரியாவை முதலில் தாக்க டிரம்ப் ஆலோசனை!


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர்கள், வடகொரியா மீது முதல் தாக்குதல் நடத்த அவரை வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள மோசமான உறவு, அதிபர் டிரம்ப்பின் பதவியேற்புக்கு பின்னர் மேலும் தொய்வடைந்தது. அறிக்கைகள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்த நிலையில்,  சமீபத்தில் அணு ஆயுத கொம்பு சீவுதலில் இரு தலைவர்களும் ஈடுபட்டனர். 

அமெரிக்காவின் மீது அணு ஆயுதத்தை ஏவுவதே தங்கள் லட்சியம் என கூறி, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் ஊன், தனது மேசையில் ஒரு அணு ஆயுத பட்டன் இருப்பதாக சமீபத்தில் கூறினார். டிரம்ப்பும் பதிலுக்கு, "என்னிடம் அதை விட பெரிய பட்டன் உள்ளது" என்றார். இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்களே கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொடர் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வரும் வடகொரியாவை, முதலில் தாக்க வேண்டும் என டிரம்ப்பின் ஆலோசகர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. 'ப்ளட்டி நோஸ்' (மூக்குடைப்பு) எனப்படும் சிறிய தாக்குதலின் மூலம், வடகொரியாவை பயமுறுத்துவது தான் இந்த திட்டமாம். ஆனால், மற்றொரு தரப்பு ஆலோசகர்கள் இந்த திட்டத்துக்கு எதிராக டிரம்ப்பிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்து வருகிறார்களாம்.

முக்கியமாக, டிரம்ப்பின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ் ஆகியோர், வடகொரியாவை தாக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறார்களாம். இதற்கு முக்கிய காரணம், எந்தவித சிறிய தாக்குதலையும், போருக்கான அழைப்பு என வடகொரியா கருதிவிடக் கூடும் என்பது தான். அதுபோன்ற சூழ்நிலையில், அந்நாட்டு சர்வாதிகாரி கிம் ஜான் ஊன், அமெரிக்க நகரங்களின் மீது அணு ஆயுதத்தை ஏவுவதற்கு கூட தயங்க மாட்டார் என அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா முதல் தாக்குதல் நடத்தும் எந்த திட்டத்திலும், அணு ஆயுத போர் துவங்கும் பெரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே வடகொரியா விஷயத்தை டிரம்ப் கையாண்டு வரும் விதம் அமெரிக்கர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள நிலையில், இந்த செய்தி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP