அமெரிக்க தேர்தல்; ட்ரம்ப்புக்கு 'செக்' வைப்பார்களா மக்கள்?

அமெரிக்காவில் நாடாளுமன்ற, மாகாண தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானம் இந்த தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

அமெரிக்க தேர்தல்; ட்ரம்ப்புக்கு 'செக்' வைப்பார்களா மக்கள்?

அமெரிக்காவில் நாடாளுமன்ற, மாகாண தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானம் இந்த தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதோடு, அவரது குடியரசு கட்சி, நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் பெரும்பான்மையோடு கைப்பற்றியது. 2 ஆண்டுகளாக குடியரசு கட்சி ஆட்சி புரிந்து வரும் நிலையில், அடுத்த கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள அனைத்து (435) உறுப்பினர்களுக்கும், செனட் சபையில் உள்ள 35 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, மாகாணங்களின் ஆளுநர் பதவிக்காகவும் தேர்தல் நடைபெறுகிறது. 

ட்ரம்ப் தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானம் இந்த தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வென்றபின், பல அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வந்தார். முக்கியமாக, அமெரிக்காவுக்குள் குடியேற்றத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். அவர் எடுத்த வரி குறைப்பு நடவடிக்கை, பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவியதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதேபோல எண்ணற்ற சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் ட்ரம்ப்.

ட்விட்டரில் சண்டை போடுவது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்வது, சீனாவுடன் அவர் நடத்தி வரும் வர்த்தகப் போர், அவர் மீது சிறப்பு கமிஷன் நடத்தி வரும் விசாரணை, ஆபாச நடிகையுடன் தொடர்பு, என சொல்லிக் கொண்டே போகலாம். அதுமட்டுமல்லாமல், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் வரலாறு காணாத அளவு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தனது மகள், மருமகனை அரசுக்குள் கொண்டு வந்து முக்கிய பதவிகள் வழங்கியதும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கருத்துக்கணிப்புகளில் அவர் மீதான மக்கள் அபிமானம் 39 சதவீதமாக அதலபாதாளத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் முந்தைய அதிபர் யாருமே இவ்வளவு குறைந்த அளவு மக்கள் அபிமானத்தை கொண்டிருந்ததில்லை என கூறப்படுகிறது. குடியரசு கட்சியை வீழ்த்தி, ட்ரம்ப்புக்கு 'செக்' வைக்கும் எண்ணத்தோடு எதிர்கட்சியான ஜனநாயக கட்சி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக பெண்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் ஆகியோர் ட்ரம்ப்பின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

பல்வேறு மாகாணங்களில் தேர்தல் கூட்டத்தை குறைக்க, தேர்தலுக்கு முந்தைய வாரமே வாக்காளர்கள் ஓட்டு போட ஏற்பாடுகள் அமெரிக்காவில் செய்யப்படும். அதுபோல, தேர்தலுக்கு முன்னதாகவே நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவு, 3.6 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP