சீர்குலையும் சுமூக உறவு: சுஷ்மா, நிர்மலா சீதாராமன் பயணத்தை ரத்து செய்தது அமெரிக்கா!

பாதுகாப்புத் துறை விவகாரமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை, தெரிவிக்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.
 | 

சீர்குலையும் சுமூக உறவு: சுஷ்மா, நிர்மலா சீதாராமன் பயணத்தை ரத்து செய்தது அமெரிக்கா!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆகியோரின் அமெரிக்க வருகை, தெரிவிக்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்கா செல்வதாக இருந்தது. அங்கு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரிடம் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவின் ஏஎச்-64இ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இந்த ஹெலிகாப்டர், தாக்குதலில் மிகச் சிறப்பாக செயல்பட வல்லது. இதன் விலை 930 மில்லியன் அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் இது 6,231 கோடி ரூபாய்).

மேலும், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்குவது மற்றும் தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ‘ஹெல்பையர்’ ரக ஏவுகணை மற்றும் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ‘ஸ்டின்ஜெர்’ ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. இது பற்றியும் பேசப்படும் என்று கூறப்பட்டது. 

கூடுதலாக,  இரவிலும் எதிரில் உள்ளவற்றை கண்டறிய உதவக்கூடிய சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், மற்றும் ரேடார்களை இந்தியாவுக்கு வழங்கவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட இருந்தது. அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கான ஏற்பாடுகள் முடிந்துள்ள நிலையில் திடீரென்று பயணத்தை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு செயலாளர் பாம்பியோ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியான மிரட்டல் விடுத்தது. மேலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யவும் அமெரிக்கா அழுத்தம் தந்து வருகிறது. இந்த சூழலில் பயணம் ரத்து செய்திருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP