அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூட்டை தடுக்கத் தவறிய போலீஸ்: திடுக்கிடும் தகவல்!

எஃப்.பி.ஐ இயக்குநர் பதவி விலக வேண்டும் என்றும் ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் கூறியுள்ளார்.
 | 

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூட்டை தடுக்கத் தவறிய போலீஸ்: திடுக்கிடும் தகவல்!

அமெரிக்காவில் ஒரு பள்ளிக்குள் நுழைந்த இளைஞன், 17 மாணவர்களைச் சுட்டுக்கொன்றான். இதுபற்றி அவன் ஏற்கனவே தகவல் வெளியிட்டும், இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறிய எஃப்.பி.ஐ இயக்குநர் பதவி விலக வேண்டும் என்றும் ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 17 பள்ளி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணையில் வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தாக்குதல் நடத்தியவன் ஏற்கனவே தன்னுடைய தாக்குதல் பற்றிய தகவலை வெளியிட்டிருந்தான் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், இது பற்றிப் பள்ளி நிர்வாகத்துக்கும், மாகாண நிர்வாகத்துக்கும் எஃப்.பி.ஐ எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை. இதனால், 17 அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


இதற்கு எஃப்.பி.ஐ தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளது. ஆனால், இதை ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ஸ்காட் ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ், தன்னுடைய தாக்குதல் திட்டம் பற்றிக் கடந்த மாதமே தகவல் தெரிவித்திருக்கிறான். ஆனால், அவனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது எஃப்.பி.ஐ.

இவர்களின் இந்தத் தவற்றால், 17 அப்பாவி மாணவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மன்னிப்பு கேட்பதால் இந்த 17 மாணவர்களின் உயிரும் திரும்ப வந்துவிடப் போவதில்லை. அந்தக் குடும்பத்தின் வலியும் மறையப்போவதில்லை. இதற்குப் பதில், எஃப்.பி.ஐ இயக்குநர் தன்னுடைய பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றார். 

கொலைகாரன் க்ரூஸ் கடந்த ஜனவரி 5ம் தேதி, எஃப்.பி.ஐ-க்கு போன் செய்து, தன்னிடம் துப்பாக்கி உள்ளது என்றும், மக்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் கூறியிருக்கிறான். மேலும், இதுபற்றித் தன்னுடைய சோஷியல்மீடியா பக்கத்திலும் செய்தி வெளியிட்டிருக்கிறான். மனநிலை தவறியவன் போல இருக்கும் க்ரூஸ், தன் காதுக்குள் யாரோ சொல்வது போல் உள்ளது என்று தற்போது கூறுகிறான். அப்போதே அவனைப் பிடித்து, உரிய சிகிச்சை அளித்திருந்தால், இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP