எனக்கு நானே பொதுமன்னிப்பு கொடுப்பேன்: ட்ரம்ப் புதிய சர்ச்சை

எனக்கு நானே பொதுமன்னிப்பு கொடுப்பேன்: ட்ரம்ப் புதிய சர்ச்சை
 | 

எனக்கு நானே பொதுமன்னிப்பு கொடுப்பேன்: ட்ரம்ப் புதிய சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களுக்கு விசாரணை கமிஷன் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தனக்கு தானே பொதுமன்னிப்பு வழங்கிக்கொள்ள அரசியல் சாசனத்தில் இடமுள்ளது என கூறி ட்ரம்ப் சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

அதிபர் வேட்பாளராக இருந்தபோது, எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரியை வீழ்த்த, ட்ரம்ப்புக்கு ரஷ்ய உளவாளிகள் உதவியதாக விசாரணை நடந்து வருகிறது. ரஷ்யா உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்த ட்ரம்ப்பின் மகன், மருமகன் உள்ளிட்ட பலர் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ட்ரம்ப்புக்கு நெருக்கமான சிலர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. தன் மீது நடக்கும் விசாரணையை தடுக்க ட்ரம்ப் முயன்றதாகவும் அவர் மீது தனி விசாரணை நடந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த விசாரணைகளை 'போலி' என்றும், அமெரிக்க உளவுத்துறை மற்றும் விசாரணை கமிஷன், சதி செய்து தன்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

சமீபத்தில் அதிபருக்கான விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி, பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கி வருகிறார் ட்ரம்ப். விசாரணையில் சிக்கியுள்ள ட்ரம்ப்புக்கு நெருக்கமானவர்கள், அவரை காட்டிக் கொடுக்காமல் இருந்தால் அவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ட்ரம்ப் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர் ரூடி ஜூலியானி, தொலைக்காட்சி ஒன்றிற்க்கு பேட்டியளித்த போது, ட்ரம்ப் தனக்கு தானே பொதுமன்னிப்பு வழங்கிக்கொள்ள முடியும் என கூறினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்த, ட்ரம்ப் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  ட்விட்டரில் இதுகுறித்து எழுதிய ட்ரம்ப், "பல சட்ட வல்லுநர்கள் கூறுவது போல, எனக்கு நானே பொதுமன்னிப்பு வழங்கிக்கொள்ள முடியும். ஆனால், அதை நான் ஏன் செய்யவேண்டும்? நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், என் மீது எதிர்க்கட்சியினர் போலி விசாரணை நடத்தி வருகின்றனர்" என எழுதினார். 

அமெரிக்க சட்டப்படி, ஒரு அதிபர், குற்றங்களில் இருந்து தனக்குத் தானே பொதுமன்னிப்பு வழங்க முடியாது, என அநேகமான சட்ட வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், ட்ரம்ப் இவ்வாறு தவறான கருத்துக்களை பரப்பி வருவது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP