ஐ.எஸ் இருக்கா இல்லையா? குழப்பத்தில் அமெரிக்க அரசு!

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிட்டதால், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை பின்வாங்க உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தற்போது மாற்றி பேசி வருகிறார்.
 | 

ஐ.எஸ் இருக்கா இல்லையா? குழப்பத்தில் அமெரிக்க அரசு!

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிட்டதால், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை பின்வாங்க உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தற்போது மாற்றி பேசி வருகிறார்.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் குர்து படைகளுடன் சேர்ந்து போராடி வருகின்றனர். அமெரிக்கப் படைகளை வெளிநாடுகளில் இருந்து திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்து வரும் நிலையில், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். எந்தவித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக இந்த அறிக்கையை ட்ரம்ப் வெளியிட்டதால், அமெரிக்க பாதுகாப்புத் துறையில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிட்டதாகவும் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார். ஆனால், அமெரிக்க பாதுகாப்புத்துறை, ஐநா உட்பட யாருமே அதை இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. 

அமெரிக்க ஆதரவுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் போரிட்டு வரும் குர்து படைகளுக்கும், அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கிக்கும் இடையே நீண்ட கால பிரச்னை உள்ளது. தங்கள் எல்லைக்கு குர்துகளை ஆபத்தாக கருதும் துருக்கி, அமெரிக்க படைகளுடன் குர்துகள் வைத்துள்ள கூட்டணியின் காரணமாகவே அவர்களுக்கு எதிராக போர் தொடுக்காமல் உள்ளது. எனவே, அமெரிக்க படைகள் பின் வாங்கப்பட்டால், குர்துகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் அனைவரையும் துருக்கி அழிக்கக்கூடும், என பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் தனது முடிவில் ட்ரம்ப் விடாப்பிடியாக இருந்ததால், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன், சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முழுவதும் அழிக்கப்பட்ட பின் மட்டும் தான் அமெரிக்க படைகளை அங்கிருந்து பின்வாங்க முடியும், என தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு ஆதரவளித்து வரும் குர்து படைகள் மீது, தாக்குதல் நடத்த மாட்டோம் என துருக்கி உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.எஸ் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், அதனால் படைகளை திரும்பபெறுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அவரது அரசில் உள்ள மற்றொரு மூத்த அதிகாரி மாற்றி பேசியுள்ளது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேம்ஸ் மேட்டிஸை போலவே, போல்ட்டனும் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது., 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP