இன்று இரவோடு மூடப்படுகிறதா அமெரிக்க அரசு??

மூடப்படுகிறதா அமெரிக்க அரசு??
 | 

இன்று இரவோடு மூடப்படுகிறதா அமெரிக்க அரசு??


அமெரிக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மசோதாவில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் சமரசம் ஏற்படாத நிலையில், அரசு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், தற்போது நாடாளுமன்ற இரண்டு சபைகள் மற்றும், அதிபர் பதவி என ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திலும் பெரும்பான்மை வகித்து வருகிறது, குடியரசு கட்சி. இக்கட்சியின் அதிபர் டிரம்ப், எடுத்த பல்வேறு முடிவுகள் எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது வருடாந்திர மத்திய பட்ஜெட் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றி வந்த குடியரசு கட்சி, பட்ஜெட்டை நிறைவேற்ற எதிர்கட்சிகளை நாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீடு உட்பட இரண்டு மசோதாக்களை குடியரசு கட்சி ரத்து செய்திருந்தது. இந்த மசோதாக்களை திரும்ப கொண்டு வராவிட்டால், பட்ஜெட்டில் சமரசம் ஏற்படாது என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

இதுவரை சமரசம் ஏற்படாத நிலையில், இன்றுடன் அரசின் பட்ஜெட் முடிவடைகிறது. பட்ஜெட் நிறைவேற்றப்படாவிட்டால், நாளை முதல் அரசு கட்டிடங்கள் மற்றும் சேவைகள் முடக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் மூடப்படும். பட்ஜெட்டில் சமரசம் ஏற்படும் வரை இந்த சேவைகள் முடங்கியே இருக்கும் அபாயத்தில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீதியில் உள்ளனர்.

இதனிடையே, குடியரசு கட்சி அதிக பெரும்பான்மை வகிக்கும்  நாடாளுமன்ற கீழ்சபையில், இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி வரை இந்த பட்ஜெட் அரசு நடத்த நிதி ஒதுக்கும். ஆனால்,  இந்த இடைக்கால பட்ஜெட் செனட் சபையில் நிறைவேற வாய்ப்பு மிகவும் கம்மி. செனட் சபையில், 100ல் 60 ஒட்டு தேவைப்படும் நிலையில், எதிர்கட்சிகளை சேர்ந்த 48 பேர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இன்று இரவோடு, அமெரிக்க அரசு சேவைகள் மூடப்பட அதிக வாய்ப்புள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP