அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இந்திய பெண் நீதிபதி 

பிரெட் கவனாக் அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானதை அடுத்து அவர் வகித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவை தேர்வு செய்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
 | 

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இந்திய பெண் நீதிபதி 

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பால் அந்நாட்டு உச்சநீதிமன்ற ஹலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிரெட் கவனாக் (வயது 53) மீது பாலியல் புகார்கள் எழுந்து சிக்கலை ஏற்படுத்தின. எனவே அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி பின்னர் நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்ததையடுத்து அவர் கடந்த மாதம் 6–ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் வகித்த கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவி காலியானது. இந்த நிலையில், இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (வயது 45) என்பவரை ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ''கொலம்பியா மாவட்ட மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அந்த பதவிக்கு அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்'' என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். ''செல்வாக்கு மிக்க அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது அதிபர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்'' என குறிப்பிட்டார்.

நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பதில் பிரச்னை ஏற்படாது.  நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள நீன்றத்தில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973–ம் ஆண்டு, மார்ச் மாதம் 22–ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்த அவர் புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி ட்ரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.  இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்ததாக மிக முக்கியமானது இந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP