அப்ரூவரானார் ட்ரம்ப்பின் தேர்தல் குழு தலைவர்!

டொனால்ட் ட்ரம்ப்புக்கு நெருக்கமான நண்பர் மற்றும் முன்னாள் தேர்தல் குழு தலைவர் பால் மேனஃபோர்ட், தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு. சிறப்பு விசாரணை கமிஷனிடம் அப்ரூவராக மாறியுள்ளார்.
 | 

அப்ரூவரானார் ட்ரம்ப்பின் தேர்தல் குழு தலைவர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மற்றும் முன்னாள் தேர்தல் குழு தலைவர் பால் மேனஃபோர்ட், தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். சிறப்பு விசாரணை கமிஷனிடம் அப்ரூவராக மாறியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

2016ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவராக செயல்பட்டவர் பால் மேனஃபோர்ட். இவர் இதற்கு முன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவின் பேரில் உக்ரைன் தேர்தலில் புடின் ஆதரவாளர் விக்டர் யானுகோவிச் வெற்றி பெற உதவியிருந்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் ட்ரம்ப் ஹிலாரியை வெல்ல பல முக்கிய திட்டங்களை தீட்டிய பெருமை இவரை சேரும். ஆனால், தேர்தலுக்கு முன்பே, ரஷ்யாவுடன் மேனஃபோர்ட்டுக்கு பல தொடர்புகள் இருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ட்ரம்ப் அவரை பணி நீக்கம் செய்தார். 

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெல்ல ரஷ்யா உதவியதாக, சிறப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ட்ரம்ப்புக்கு நெருக்கமான அதிகாரிகளோ, அவரோ, தெரிந்தே ரஷ்யாவுடன் கூட்டுசதியில் ஈடுபட்டனரா என்பதை நோக்கி விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ட்ரம்ப்புக்கு நெருக்கமான பலர் குற்றம்சாட்டப்பட்டு, வெவ்வேறு விவகாரங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அப்ரூவராகவும் மாறியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின், தேர்தல் ஆலோசகர் ஜார்ஜ் பாபடாபோலஸ், ட்ரம்ப்பின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோர் உட்பட பலர் தற்போது அமெரிக்க அதிகாரிகளுக்கு விசாரணையில் உதவி வருகின்றனர்.

அந்த வரிசையில், ட்ரம்ப்பின் தேர்தல் குழு தலைவராக பணியாற்றிய பால் மேனஃபோர்ட்டுக்கு எதிராக வரி ஏய்ப்பு, வெளிநாட்டு அரசுடன் சேர்ந்து சதி செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2006ம் ஆண்டு முதல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்த விசாரணையில் சிறப்பு கமிஷன் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க இதுவரை மறுத்து வந்தார். 

ட்ரம்ப்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்காமல் இருந்தால், தனது விசேஷ அதிகாரங்களை பயன்படுத்தி, ட்ரம்ப் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு உட்பட  பல்வேறு குற்றங்களை தான் செய்ததை மேனஃபோர்ட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சிறப்பு விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வாக்குறுதியும் அவர் அளித்துள்ளார். இது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP