இந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்!- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல் 

பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்!- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல் 

கடன் மோசடி வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

கிங் பிஷா் நிறுவனத்தின் அதிபா் விஜய் மல்லையா  இந்திய வங்கிகளில் சுமாா் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அவற்றை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக வங்கிகள் கூட்டமைப்பு சி.பி.ஐ.யிடம் புகாா் அளித்தது. அதன் அபடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் லண்டன் குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடா்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், அவா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவா் அடைக்கப்படவுள்ள சிறைச்சாலையின் புகைப்படம், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் இந்திய அரசும் மும்பையில் உள்ள ஆா்தா் சிறையின் வீடியோ, புகைப்படங்களை லண்டன் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. 

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. பின் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''நான் நாட்டை விட்டு புறப்படும் முன் கடன்களை திருப்பித் தருவது குறித்து பேச நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன். இதுதான் உண்மை. எனது செட்டில்மெண்ட் கடிதங்களுக்கு வங்கிகளும் ஆட்சேபணைகளைப் பதிவு செய்துள்ளது.  நான் ஏன் வெளியேறினேன் என்றால் ஜெனிவாவில் கூட்டம் இருந்தது. போகும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன். வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதாக அவரிடமும் தெரிவித்தேன். இதுதான் உண்மை. 

ஏற்கெனவே கூறியது போல இந்தியாவில் அரசியல் லாபத்துக்காக நான் பலியாக்கப்பட்டுவிட்டேன்.  நான் அரசியல் கால்பந்தாகிவிட்டேன். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் நிச்சயமாக பலிகடாதான். பலிகடாவாக தான் உணர்கிறேன். அங்கு இரு கட்சிகளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.

அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்ஃபிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. நீதிமன்றம் தான் இனி முடிவெறுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையாவின் இந்த பரபரப்புத் தகவல் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. அதோடு இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துபடுவது தொடர்பாக இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 தேதி லண்டன் நீதிமன்றம் அளிக்க உள்ளது.  

ஜெட்லி சந்திப்பை வினவும் காங்கிரஸ்....

இதனிடையே பல ஆயுரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேற எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்? அருண் ஜேட்லி உடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னணி என்ன? என்று மத்திய அரசு மக்களுக்கு பதிலளித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP