இலங்கை ராணுவம் செய்தது ஒரு இனப்படுகொலை: ஐநா முன்னாள் அதிகாரி ஒப்புதல்

இலங்கை ராணுவம் இன படுகொலை செய்தது- முன்னாள் ஐநா அதிகாரி தகவல்
 | 

இலங்கை ராணுவம் செய்தது ஒரு இனப்படுகொலை: ஐநா முன்னாள் அதிகாரி ஒப்புதல்


25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு சமமானது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி பெஞ்சமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி ஈழம் கோரி ஆயுதப் போரை முன்னெடுத்தனர். 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த காலப்பகுதியில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது என குற்றம் சுமத்தப்பட்டது. அதே குற்றச்சாட்டுக்கள் புலிகள் அமைப்பு மீதும் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐ.நா சபையின் முன்னாள் மூத்த அதிகாரி பெஞ்சமின் டிக்ஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை. இலங்கை ராணுவத்தின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை. இன்னும் சொல்லப்போனால், இன அழிப்புக்கு சமமானவை. இலங்கை ராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது. ஆனால், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நடத்தியதை ராணுவம் ஏற்க மறுக்கிறது.

தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, அது விடுதலை அல்ல, அவர்களுக்கான பேரழிவு. போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், முன்பைவிட இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை" என்றார்.

இலங்கையில் போர் நிலவிய காலப்பகுதியான 2004 முதல் 2008ம் ஆண்டுவரை, விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு தலைவராக பெஞ்சமின் டிக்ஸ் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP