Logo

இலங்கை: மனித உரிமை மீறல் தொடர்பாக 5,614 புகார்!

கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 5,614 புகார்கள் பதிவு
 | 

இலங்கை: மனித உரிமை மீறல் தொடர்பாக 5,614 புகார்!


கடந்த ஆண்டு மட்டும் இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக 5,614 புகார்கள் வந்துள்ளதாக ஆணை குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தைக் காரணம் காட்டி பலர் விசாரணை என்ற பெயரில் போலீஸ் மற்றும் ராணுவ புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் நபர் ஒருவரை 180 நாள் வரையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாது சிறையில் அடைத்து வைக்க பயங்கரவாத தடை சட்டம் அனுமதி அளிக்கின்றது. 

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் விசாரணைகள் இன்றி சிறையில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ராணுவ புலனாய்வாளர்களினால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள், தாம் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் ராணுவத்தினரினால் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டதாக ஐ.நா சபை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களிடம் புகார் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, "கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் எங்களுக்கு 5,614 புகார்கள் வந்துள்ளது. இதில் 1,174 புகார்கள் போலீஸாரால் நடத்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத கைதுகள் குறித்தவை.

இதில் 249 புகார்கள் சித்திரவதைகளை அடிப்படையாகக் கொண்டது. இதேபோல், ராணுவம் நடத்திய அத்துமீறல் தொடர்பாக 171 புகார்களும், போலீஸ் அச்சுறுத்தல்கள் குறித்து 323 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 298 புகார்கள் பலவந்தமாக கைது செய்து சிறையில் அடைத்து வைத்தல் தொடர்பானது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 5,614 புகார்களில் 2,015 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது" என்றார்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு அதிக புகார்கள் வந்தன. 2016ம் ஆண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன. தற்போது புகார்கள் குறைந்துள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP