Logo

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. வழிபடும் முறையில் வேறுபாடு இருந்தாலும், வழிபாட்டின் தத்துவம், நோக்கம், அமைதி, அன்பை போதிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை, நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
 | 

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

கிறிஸ்த்துவர்களின் புனித திருநாளான ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அந்நாட்டில், 2.14 கோடி பேர் வசிக்கின்றனர். அவர்களில், 70 சதவீதம் பேர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். 12 சதவீதம் பேர் ஹிந்துக்கள், 9.7 சதவீதம் பேர் முஸ்லிம்களும், 7.4 சதவீதம் பேர் கிறிஸ்த்துவர்களும் வசிக்கின்றனர். 

பல்வேறு சமயங்களில் தொடர்ந்து பல சாேதனைகளை சந்தித்து வந்த இலங்கையில், தற்போது மீண்டும் ஒரு பயங்கரவாத சம்பவம் அரங்கேறியிருப்பது, அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மதங்களின் பெயரில் பயங்கரவாதத்தை விதைக்கும் விஷமிகளே இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என, இலங்கை அரசு சந்தேகிக்கிறது. 

இச்சம்வத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதன் மூலம், சர்வதேச பயங்கரவாத கும்பல், உலக நாடுகளுக்கு விடுத்துள்ள மிரட்டலாகவே இதை பார்கக்க முடிகிறது. 

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

இதற்கு முன், இந்த ஆண்டு ஜனவரியில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 20 பேர் பலியாகினர். 

கடந்த ஆண்டு இறுதியில், இந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், சிலர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர். 2017ல் எகிப்து நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், 49 பேர் பலியாகினர். 

மேற்கண்ட தாக்குதல்கள் அனைத்தும், கிறித்துவர்களின் புனித நாளான ஞாயிற்றுக்கிழமையே அரங்கேறியுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். 

இலங்கையில் குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிரான தாக்குதலாக மட்டுமின்றி, சர்வதேச நாடுகளுக்கு, பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது. 

சமீபத்தில், நியூசிலாந்தில், தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். அதில் 49 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இது, இஸ்லாம் மத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமாக பார்க்கப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதியும், தங்கள் நாட்டிற்குள், வேற்று மதத்தினர் வருவதையும், அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் ஏற்க முடியவில்லை எனக் கூறினான். 

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

அதே போல், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில், இன்றும் மத வெறி, இன வெறி, நிற வெறித் தாக்குதல் நடத்தப்படுகின்றன. பல வெளிநாடுகளில், தலைப்பாகை அணியும் சீக்கியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

உலகின் பல நாடுகளிலும், மத வெறுப்பு அதிகரித்துள்ளது. மதத்தின் பெயரில், மக்களை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள், தொடர்ந்து தாக்குதல் நடத்தி, மக்களை காவு வாங்கி வருகின்றனர். அதில், குறிப்பிட்ட மதத்தினர் மீது தான் என்றில்லாமல், பல நேரங்களில், பல மதங்களை சேர்ந்தோர் கொல்லப்படுகின்றனர். 

இலங்கையில், 10 ஆண்டுகளுக்கு முன், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது, பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதன் பின், அந்நாட்டில் மிகப் பெரிய அளவிலான தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை. 

இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போருக்குப் பின், சில ஆண்டுகள் அந்நாட்டில் சுற்றுலா மிகப் பெரிய சரிவை சந்தித்தது. தற்போது தான், அந்நாட்டு சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு, 20 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் தான், இலங்கையில் சிறுபான்மை மதத்தினரான கிறிஸ்த்துவர்களின் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கிய ஓட்டல்கள், வெளிநாட்டினர் அதிகம் கூடும் பொது இடங்கள் என பலவற்றிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

உலகில் உள்ள அனைத்து மதங்களும், அமைதியைத் தான் போதிக்கின்றன. அமைதியையும், ஆசை துறப்பையும் போதிக்கும் புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் இலங்கையில் தான், தற்போது இப்படிப்பட்ட அமைதியற்ற சூழல் உருவாகியிருக்கிறது. 

இதில், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் குறை கூறுவதற்கில்லை. ஏனெனில், மதத்தில் குற்றமில்லை, அது போதிக்கும் மார்க்கத்திலும் குற்றமில்லை. அதை தவறாக புரிந்து கொண்டு, மாற்று மதத்தினரை அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் மீது தான் குற்றமிருக்கிறது. 

ஆம்... பயங்கரவாதிகள் ஒரே நாளில் உருவாவதில்லை. தொடர் பிரசாரங்களால், மூளைச்சலவையால் உருவாக்கப்படுகிறார்கள். தங்கள் மதம் மட்டுமே சிறந்ததாக கருதும் முட்டாள் கூட்டத்தின் ஒரு பகுதியினர், தங்களின் தவறான எண்ணத்தை, கொள்கையாக சித்தரிக்கின்றனர். 

அந்த கொள்கையை பரப்பும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். பதின் பருவத்தில் இருக்கும் வளர் இளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் மூளைச் சலவை செய்து, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். அவர்களிடம் தங்கள் மதத்தை தவிர மாற்று மதத்தை கடைபிடிப்பவர்களை அழிக்கும் படி ஆணையிடுகின்றனர். 

ஒருவித வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்து, அக்மார்க் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர். மாற்று மதத்தினரை கொல்லும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்தால், நேரடியாக இறைவனடியில் தஞ்சம் புகலாம் என தவறான போதனையும் செய்யப்படுகிறது

குறிப்பாக, ஜிகாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பயங்கரவாதிகள், மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடத்தவும், அவரை காெத்துக் கொத்தாக கொன்று குவிக்கவும், எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. 

மதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்!

வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை இனியும் அனுமதித்தால், அது, ஒட்டுமாெத்த சமூகத்திற்கும் கேடாய் விடிந்து விடும். 

எனவே, மத நம்பிக்கைகள் இருந்தாலும், மாற்று மதத்தினரை மதிக்க கற்றுக் கொண்டுள்ளாேர் இணைய வேண்டும். மார்க்கங்களால் வேறுபட்டாலும், மனங்களால் ஒன்றுபட்டோர், உலக  சமுதாயத்தை காக்க முயற்சிக்க வேண்டும். 

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. வழிபடும் முறையில் வேறுபாடு இருந்தாலும், வழிபாட்டின் தத்துவம், நோக்கம், அமைதி, அன்பை போதிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை, நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

அப்போது தான், மதத்தின் பெயரில், நம் மகன்களையும், மகள்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாக்க முடியும். ஒரு பயங்கரவாதி உருவாவது தடுக்கப்பட்டால், ஓராயிரம் உயிர் பலியாவதை தடுக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். மதங்களை கடந்து மனிதம் காப்பதில் கவனம் செலுத்துவோம்!

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP