இலங்கை துாதரிடம் யுத்த ரகசியங்களை கோரியதா அமெரிக்கா?

இலங்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை அமெரிக்கா கோரியது-ஜலிய விக்ரமசூரிய
 | 

இலங்கை துாதரிடம் யுத்த ரகசியங்களை கோரியதா அமெரிக்கா?


அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்ற அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் ஜலிய விக்ரமசூரியவிடம் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை இறுதிக்கட்டப் போர் பற்றிய அரசத் தகவல்களை கேட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 

அமெரிக்காவிற்கான இலங்கை தூதரக அதிகாரியாக பதவியில் இருந்த காலப்பகுதியில் பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஜலிய விக்ரமசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

2017ம் ஆண்டு ஜூலை மாதம், தனது கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜலிய விக்ரமசூரிய அனுமதி கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 8 வாரங்களுக்கு உலகில் எந்த நாட்டிற்கும் சிகிச்சைக்காக செல்லலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக, ஜனவரி 5ம் தேதி அவரை கைது செய்ய நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதற்கான காரணங்களைக்கூறி, ஜலிய விக்கிரமசூரியவின் சட்ட பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, உயர் சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விக்கிரமசூரியவை அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டால் தடையின்றி பயணிக்க அனுமதிப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் விதமாக அதனை முன்னாள் தூதர் விக்ரமசூரிய மறுத்துவிட்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP