மியான்மரில் போர் குற்றம்: ராணுவ தளபதி பதவி விலக ஐ.நா. வலியுறுத்தல்

மியான்மரில் ரோஹிங்கிய மக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட போர்க்குற்றங்களை குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம் அந்நாட்டின் ராணுவ தளபதி பதவி விலக வலியுறுத்தியுள்ளது.
 | 

மியான்மரில் போர் குற்றம்: ராணுவ தளபதி பதவி விலக ஐ.நா. வலியுறுத்தல்

மியான்மரில் ரோஹிங்கிய மக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட போர்க்குற்றங்களை குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம் அந்நாட்டின் ராணுவ தளபதி பதவி விலக வலியுறுத்தியுள்ளது. 

மியான்மரிலிருந்து வெளியேறிய வங்கதேசத்தில் வாழ்ந்து வரும் ரோஹிங்கிய அகதிகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணைய தூதர்கள் சந்தித்து அவர்கள் ராணுவத்தால் எதிர்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்தனர்.  அகதிகள் முகாமில் தங்கிய அதிகாரிகள் மக்களிடம் நேர்காணல்களையும் நடத்தினர். 

இது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி  மின் அவுங் ஹிலாய்ங்  ஆகியோரிடமும் ஐ.நா அதிகாரிகள் கலந்துரையாடினர். 

இதனை அடுத்து சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை துறை தலைமையகத்தின் சார்பில்  மார்ஸூக்கி டாருஸ்மான் தலைமையில் சர்வதேச நடுவர்களை கொண்ட சுதந்திரமான உண்மையறியும் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் மியான்மர் போர்குற்றம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ''ரோஹிங்கியா மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் அரங்கேற்றியது 'இன அழிப்பு' நோக்கத்திநாளான தாக்குதல். 

இதற்கு காரணமான மியான்மர் ராணுவ தளபதி மின் அவுங் ஹிலாய்ங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மியான்மர் அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

ரோஹிங்கியர்களுக்கு நடந்தது என்ன? 

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கிய இன இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் அங்குள்ள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ரோஹிங்கியர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது.

கடந்த ஆண்டில் ராணுவத்தின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

சுமார் 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதே போல, மியான்மரில் ரோஹிங்கிய இனப் பெண்கள், சிறுமிகள் ராணுவத்தினரால் கொடூரமான வன்புணர்வு செயல்களுக்கு ஆட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP