மாலத்தீவுகள் சர்ச்சை; அதிபரும் உச்சநீதிமன்றமும் நேருக்கு நேர் மோதல்

மாலத்தீவுகள் சர்ச்சை; அதிபரும் உச்ச நீதிமன்றமும் நேருக்கு நேர் மோதல்
 | 

மாலத்தீவுகள் சர்ச்சை; அதிபரும் உச்சநீதிமன்றமும் நேருக்கு நேர் மோதல்


மாலத்தீவுகள் அரசு வரலாறு காணாத சர்ச்சையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யமீன், உச்ச நீதிமன்றத்துடன் நேருக்கு நேர் மோதி வருவது, தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த வருடம் அதிபர் யமீனின் கட்சியில் இருந்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு தாவினர்கள். ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வந்த அதிபர் யமீனை, நாடாளுமன்றம் கூடி, பதவி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. 12 எம்.பி.க்கள் எதிர்கட்சிக்கு தாவியதால் அவரை பதவியில் இருந்து நீக்க எடுக்கப்படும் வாக்கெடுப்பு நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 12 எம்.பி.க்களின் பதவியை பறித்து அதிபரின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்களை கைது செய்யவும் அதிபர்  யமீன் உத்தரவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் அண்டை நாடுகளில் பதுங்கியுள்ளனர். இதுவரை 2 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்த மாலத்தீவுகள் உச்சநீதிமன்றம், கைது செய்யப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், 12 எம்.பி.க்களின் பதவியை மீண்டும் வழங்கவும் உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு அதிபர் ஒப்புக்கொள்ளவில்லை. அதிபருக்கு ஆதரவான அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் முஹம்மது அனில், அதிபரை கைது செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிடப் போவதாகவும், அப்படி ஒரு உத்தரவு வந்தால், அதை பின்பற்றக் கூடாது என போலீஸாரிடமும் ராணுவத்திடமும் கூறியுள்ளதாக பேட்டியளித்தார்.

விமான நிலையத்தில் வந்திறங்கும் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எம்.பி.க்களை சபையில் கூட விடாமல் செய்ய, நாடாளுமன்றத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. தற்போது நாடாளுமன்றத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றமும், அரசும் நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், மாலத்தீவு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி  வருகின்றனர். 

முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் முஹம்மது நஸீத், சில வருடங்களுக்கு முன் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். சர்வதேச அளவில் இந்த முடிவு பலத்த சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற அவர், தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாவிட்டால், அரசு வரலாறு காணாத மிகப்பெரிய சர்ச்சையை நோக்கி பயணிக்கும் என கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP