துருக்கி: புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் பணி நீக்கம்

துருக்கி ராணுவ புரட்சியில் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்ட 18,500 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 | 

துருக்கி: புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் பணி நீக்கம்

துருக்கி ராணுவ புரட்சியில் பங்கேற்றதாக குற்றம்சாட்டப்பட்ட 18,500 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

துருக்கியில் கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 18 ஆயிரத்து 500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து அந்நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 ஆயிரத்து 998 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்து 152  ராணுவ அதிகாரிகள் உள்பட 18 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என துருக்கியின் அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த துருக்கி அதிபர் தேர்தலில் அதிபர் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட இம்முறை அதிகப்படியான அதிகாரங்களை உடைய அதிபராக அவர் உருவெடுத்துள்ளார். இந்த சூழலில், தனக்கு எதிராக செயல்பட்டவர்களை கடுமையாக வழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதிதான் இந்த பதவி பறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சியின் பின்னணி: 

எர்டோகன் தலைமையிலான அரசு ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. ராணுவத்தின் அதிகாரங்கள் சுறுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு அதிருப்தி அதிகரித்து ராணுவ புரட்சி ஏற்பட்டது. தங்களை பீஸ் கவுன்சில் என்று அழைத்துக்கொண்ட ஒரு பிரிவு வீரர்கள், கடந்த 2016 -ம் ஆண்டு நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். 

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சிப் படை வீரர்கள் தலைமைத் தளபதி ஜெனரல் ஹுலுசி ஆகாரை சிறைபிடித்தனர். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த அதிபர் எர்டோகன், நிலைமையை ராணுவத்துக்கு எதிராக திருப்ப நள்ளிரவில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். சாலை, தெருக்களில் இறங்கி, புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிடுங்கள் என்று அழைப்புவிடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சாலையில் இறங்கி ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. அங்காராவின் சாலைகளில் ரோந்து சுற்றிய பீரங்கி வாகனங்களை பொதுமக்கள் நிராயுதபாணியாக மறித்து சிறைபிடித்தனர். அப்போது புரட்சிப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்களில் பலர் உயிரிழந்தனர்.

ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் ராணுவ வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பல இடங்களில் பீரங்கிகளின் மீது ஏறிய பொதுமக்கள், ராணுவ வீரர்களை அடித்து உதைத்தனர். புரட்சிப் படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடைபெற்றது.

ராணுவ புரட்சியை மக்கள் தோற்கடித்தனர். இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் உயிரிழந்தனர். அதிபர் எர்டோகனின் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர்.  இருதரப்பிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 104 பேருக்கு தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP