துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் மீண்டும் வெற்றி!

துருக்கி அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் மீண்டும் வெற்றி!

துருக்கி அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். 

துருக்கி நாட்டில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதிபர் தேர்தலில் மொத்தம் 6 பேர் களத்தில் இருந்தனர். 99 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர். இதில், தற்போதைய அதிபர் எர்டோகனின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி 53 % வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. எர்டோகனை எதிர்த்துப் போட்டியிட்ட முகரம் இன்ஸின் மக்கள் குடியரசுக் கட்சி  31 % சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து துருக்கியின் அதிபராக 2வது முறையாக எர்டோகன் பதவி ஏற்கவுள்ளார். கடந்த 2016 துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் ராணுவத்தின் பலத்தை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சி வெடித்தது. ஆனால், அது தடுக்கப்பட்டது. இதில் தொடர்புடைய பலருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 

அதேபோல், தங்களை பீஸ் கவுன்சில் என்று அழைத்துக்கொண்ட ஒரு பிரிவு வீரர்கள், கடந்த 2016 -ஆம் ஆண்டு நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சிப் படை வீரர்கள் தலைமைத் தளபதி ஜெனரல் ஹுலுசி ஆகாரை சிறைபிடித்தனர்.  ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த அதிபர் எர்டோகன், நிலைமையை ராணுவத்துக்கு எதிராக திருப்ப நள்ளிரவில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். சாலை, தெருக்களில் இறங்கி, புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிடுங்கள் என்று அழைப்புவிடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சாலையில் இறங்கி ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. அங்காராவின் சாலைகளில் ரோந்து சுற்றிய பீரங்கி வாகனங்களை பொதுமக்கள் நிராயுதபாணியாக மறித்து சிறைபிடித்தனர். அப்போது புரட்சிப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்களில் பலர் உயிரிழந்தனர்.

ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் ராணுவ வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பல இடங்களில் பீரங்கிகளின் மீது ஏறிய பொதுமக்கள், ராணுவ வீரர்களை அடித்து உதைத்தனர். புரட்சிப் படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடைபெற்றது. ராணுவ புரட்சியை மக்கள் தோற்கடித்தனர். இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் உயிரிழந்தனர். அதிபர் எர்டோகனின் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர்.  இருதரப்பிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று எர்டோகன் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவசர நிலையை அடுத்து, 2019-ல் நடக்க வேண்டிய தேர்தலை, ஒரு ஆண்டு முன்னரே நடத்த உத்தரவிட்டார் எர்டோகன். அதனைத் தொடர்ந்து தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றது.

முன்னதாக, துருக்கியில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்வரை அதிபர்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்தார். 91 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் உயரிய தலைவரான அதிபரை, பொதுமக்களே தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தேர்தலில் எர்டோகன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் துருக்கியின் அதிபராக எர்டோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP