1. Home
  2. ஆரோக்கியம்

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் கறிவேப்பிலை

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் கறிவேப்பிலை

வேண்டியதைச் சாப்பிட்டு வேண்டாததைத் தூக்கியெறியும் பழக்கத்தைக்கொண்டிருப்பவர்கள்தான் நம்மில் அதிகம். அவற்றில் முக்கியமானது சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை. கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள் நம்மை ஆரோக்ய அழகுடன் வைத்திருக்கவும் உடலில் ஏற்படும் சிறிய கோளாறுகளை நீக்கவும் சிறந்த கைமருந்து. நம் பாட்டி காலத்தின் விலையில்லா கைவைத்தியத்தில் கறிவேப்பிலையும் ஒன்று.

கறிவேப்பிலையை உணவில் பார்த்தாலே இன்று பெரும்பாலானோர் முகம் சுளிக்கிறார்கள். ஆனால் எல்லா உணவு வகைகளிலும் இனிப்பு நீங்க லாக கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் நறுமணமும் சுவையும் பன்மடங்கு அதிகமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன இருக்கு கறிவேப்பிலையில் என்று கேட்கலாம். உடம்பிற்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற அனைத்தும் அதிகமாக இருக்கின்றது. உடல் பருமனால் மனஅழுத்தம், உடல் ரீதியான பிரச்னைகள் என்று இருப்பவர்கள் கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துவந்தால் சோர்வு நீங்கி உற்சாகமாக வளையவருவார்கள்.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் பருமனைக் குறைக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. இரத்த சோகையை நீக்கும் மகத்தான உணவுப் பொருளாகவும் கறிவேப்பிலை விளங்குகின்றது. எண்ணெயில் பொறித்து கொடுத்தாலும் மொறு மொறு கறிவேப்பிலையை வெளியே வீசிவிடுவார்கள். இதற்கு பெரியவர்களும் விதிவிலக்கல்ல.அதனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி கறிவேப்பிலையைத் துவையலாக்கிவிடுங்கள்.

கறிவேப்பிலைத் துவையல்:
தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை – 4கப், கடுகு- 4 டீஸ்பூன், உ.பருப்பு- 2 டேபிள் கரண்டி,வரமிளகாய், – காரத்துக்கேற்ப, தேங்காய்- அரை மூடி, உப்பு, புளி, நல்லெண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து தேங்காயையும் நறுக்கி வைக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காரத்துக்கேற்ப வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த விழுதை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.
சுவையான கறிவேப்பிலைத் துவையலை உதிராக வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். தோசையில் பரத்தி கொடுக்கலாம். தயிர்சாதத்துக்கு ஏற்ற சைட்டிஷ் இது. பத்தே நிமிடத்தில் செய்வதற்கு ஏற்ப எளிமையான சத்தான துவையல் வகை இது.

வாரம் ஒரு நாள் இந்தத் துவையலை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வருங்காலத்தில் நீரிழிவு மற்றும் எவ்வித உடல் உபாதை களாலும் பாதிக்காமல் ஆரோக்யமாக வளர்வார்கள். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்து கறிவேப் பிலையை மென்று சாப்பிட்டால் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு பதிலாக இந்தத் துவையலையும் அவ்வப்போது சேர்த்து வந்தாலே நீரிழிவு மட்டுப்படும் என்பது உண்மை.

இட்லிப்பொடியை போன்று கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்தும் உதிரான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருக்கும் கறிவேப்பிலையின் பயனை இந்தத் துவையலில் முழுமையாக பெறலாம் அதிலும் சப்புக்கொட்ட வைக்கும் சுவையுடன். உடனடியாக செய்து பாருங்கள். சுவையும் மணக்கும், ஆரோக்யமும் நிலைக்கும். அழகும் கூடும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like