வயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

வயிற்றுக்கு வெளியே குடல், கல்லீரல் துருத்திக் கொண்டிருந்த தான்சானியா பெண்ணுக்கு சென்னையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
 | 

வயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

தாயின் வயிற்றில் குழந்தை வளரும்போது, ஆறு முதல் 10வது வாரத்தில்தான் குழந்தையின் செரிமான மண்டலம் உருவாகி வளர ஆரம்பிக்கும். அப்போது, சிறுகுடல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் மெல்லிய, ஒளிவு மறைவற்ற பை போன்ற அமைப்பில் இருக்கும். அதன்பிறகு, இந்த பையில் இருந்து உறுப்புக்கள் வயிற்றுப் பகுதிக்குள் இழுக்கப்படும். 11வது வாரத்தில் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு செல்லும். சில குழந்தைகளுக்கு அதாவது, 10 ஆயிரம் சிசுக்களில் ஒன்றுக்கு இந்த இட மாற்றம் சரியாக நடைபெறாமல் போகலாம். 

அப்படி, வயிற்றுப் பகுதியில் வெளியே சிறுகுடல், கல்லீரல், பெருங்குடல் துருத்திக் கொண்டிருந்த தான்சானியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அறுவைசிகிச்சை நடைபெற்றது இதுவே முதன்முறை என்று அறுவைசிகிச்சையை மேற்கொண்ட  வயிறு இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பட்டா ராதாகிருஷ்ணா மேலும் கூறுகையில்,  "குடல், கல்லீரல் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குழந்தைகள் பிறப்பது அரிது. அப்படி பிறக்கும் குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழ்வதும் இல்லை. பிறந்த உடன் அறுவைசிகிச்சை செய்தால் இந்த குழந்தைகள் உயிர் வாழலாம். 

தான்சானியாவைச் சேர்ந்த அமூர் சௌதா சுலைமான் பிறந்தது முதற்கொண்டே குடல் துருத்தம் காரணமாகப் போராடிக் கொண்டிருந்தாள். தான்சானியாவில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் பெற்றோர் அவளை சென்னைக்கு அழைத்து வந்தனர். 

கல்லீரலை அழுத்தாமல் அப்படியே அதை வயிற்றுக்குள் மீண்டும் சேதப்படுத்தாமல் பொருத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். வயிற்றுக்குள் மிகக் குறைந்த அளவில் இடம் இருப்பதால் அதை அதிகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. வயிற்றுக்குள் குழாயைச் சொருகி அதன் வழியே ஒரு லிட்டர் காற்றை உள்ளே அனுப்பினோம். இரு வாரம் கழித்து வயிற்றின் அளவு அதிகரித்தது. வயிற்று உள்ளறைக்குள் காற்றைச் செலுத்தும் இவ்வகைச் சிகிச்சைக்கு பிபிபி – ஃப்ரீ ஆபரேடிவ் நிமோஆபெரிடோனியம் என்று பெயர்.

மயக்க மருந்தியல், பிளாஸ்டிக் சர்ஜன் என பல துறை நிபுணர்கள் இணைந்து இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தோம். நோயாளி தற்போது நன்கு குணமடைந்துவிட்டார். விரைவில் மருத்துவமனையிலிருந்து தான்சானியா திரும்புவார்" என்றார்.

சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில் ‘இரைப்பைக் குடல், கல்லீரல் பித்தநீர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சிம்ஸ் மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது. எங்கள் மருத்துவக் குழு அதி நவீன இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகளைத் திறம்படச் செய்து முடிக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். சிம்ஸ் மருத்துவமனையில் பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப மிகச் சிறந்த மருத்தவ சிகிச்சையை வழங்குவதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP