இனி என்றும் இளமை சாத்தியமே

இன்றைய நாளில் பலருக்கும் 30 – 40 வயதிற்குள் வயோதிக தோற்றம் ஏற்பட்டு விடுகிறது.மேலும் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருந்து மாத்திரைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .
 | 

இனி என்றும் இளமை சாத்தியமே

மனித வாழ்க்கையில் உடல் நல ஆரோக்கியம் மிக மிக முக்கியமான இடம் வகிக்கிறது.ஆத்திச்சூடி தந்த தமிழ்ப்பாட்டி ஔவை  நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததன் பின்னணியில்  தகடூர் ஆண்ட மன்னன்  அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்கிறது பழந்தமிழ் இலக்கியங்கள். கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. 

இன்றைய நாளில்  பலருக்கும் 30 – 40 வயதிற்குள் வயோதிக தோற்றம் ஏற்பட்டு விடுகிறது.மேலும் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருந்து மாத்திரைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .
இத்தனைக்கும் தமிழ் முன்னோர்கள் , நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வழிகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். என்றும் இளமை இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். என்றும் இளமை தரும் நெல்லிக்கனி பற்றிய பல தகவல்களை இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.

பொதுவாக நமது உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தம் சரியான வகையில் இருந்தால்  நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை. மாறாக இரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் நோய எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் எளிதாக உடல் நலன் பாதிக்கப்படுகிறோம்.நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், இதயம் பலம் பெறவும் நெல்லிக்கனி உதவுகிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்குவதால் கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது . மேலும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச்  செய்ய நெல்லிக்கனி பெரிய அளவில்  உதவுகிறது.

நமது பாரம்பரிய வைத்திய முறையில், புளிப்பு வாயுவையும்,  இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், துவர்ப்பு கார்ப்பும் கபத்தையும் போக்கக்கூடிய தன்மை படித்தவை. கபம்,வாதம்,பித்தம் இந்த மூன்று தொந்தரவுகளையும் சரி செய்யக்கூடிய அபூர்வ சக்தி படைத்தது நெல்லிக்கனி.சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் நெல்லிக்கனி கல்லீரல் குறைபாட்டை நீக்குவதுடன் இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் பிரச்னை வராமல் தடுக்கிறது.மேலும் கருகரு தலைமுடியை  காத்திடவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நெல்லிக்கனி பல வகைகளில் உதவுகிறது. மிகச்சரியாக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் சர்வ ரோக சஞ்சீவினியாக விளங்குகிறது நெல்லிக்கனி.

நெல்லிக்கனியை நேரடியாகவும் சாப்பிடலாம். ஜூஸ் போட்டும் குடிக்கலாம். நெல்லிக்கனி பொடியை தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். மேலும் தேனில் ஊறவைத்த நெல்லிக்கனி சாப்பிட சுவை மிகுந்தது. நெல்லிச்சாறு, சர்பத், நெல்லிபர்பி, நெல்லிமுரப்பா, உலர்நெல்லி, நெல்லி லேகியம், நெல்லிநீர், நெல்லிக்கனி ஊறுகாய் இப்படி பல வகைகளிலும் நெல்லியின் குணநலன்களை நாம் பெறலாம்.

நெல்லிப்பொடி +  பாகற்காய் பொடி  கலந்த கலவையை சாப்பிட சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம். சுவாசக் கோளாறுகள் நீங்க நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிடலாம்.கண் பார்வை மேம்பட நெல்லிப் பொடியுடன் தேன்  கலந்து இரவில் எடுத்துக் கொள்வது நல்லது.இதனால் சளி , இருமல் தொல்லைகளும் தீரும்.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து கொண்ட நெல்லிக்கனியில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.

ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் நெல்லிக்கனியை தினம் நமது உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள என்றும் இளமை என்பது சாத்தியமே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP