தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி?

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஈஸ்ட்ரோ ஜென் ரத்தத்தை அடர்த்தியாகும், இதனால் முன் கூட்டியே பூப்பெய்திய பெண்கள் மார்பக புற்றுநோய், இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட அபாயங்களை வாழ்வின் மத்தியிலோ, பிற்கட்டத்தில் சந்திக்க வாய்ப்புகள் அதிகள் உள்ளதாக கருதப்படுகிறது.
 | 

தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி?

தென்னம்பிள்ளையும், பெண் பிள்ளையும் வளர்வதே தெரியாது என்பதைப் போல, தான் ஒரு பெண் பிள்ளை என்பதை அறியாமல்,  ஆண்பிள்ளைகளோடு சரி நிகர் சமானமாய்  பதின் பருவம் வரை விளையாடிய காலம் போய் 8 வயதிலும் 9 வயதிலும் பூப்பெய்தலை சந்தித்து தனிமைப்படுத்தப்படும் கொடுமை தற்காலத்தில் அரங்கேறி வருகிறது.

12 வயது முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் இயற்கையாக நிகழ்ந்த பூப்பெய்தல், அவ்வாறு முறையாக பூப்பெய்த பெண் பிள்ளைகள் பெற்ற சுகமான சுகப்பிரசம் என எல்லாம் தற்போதைய நவீன காலகட்டத்தில் மாறிப்போன அவலம் எதனால் நிகழ்ந்து வருகின்றன?

எல்லாம் நாமே தேடிக்கொண்ட அதிவேக வாழ்க்கை முறையால் தான், வேகமான வாழ்க்கை முறையில் முறையில் சிக்குண்டு, பல பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த இன்ப சூழலின் ஒரு பாதியை கூட தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க மறந்து விட்டனர் என்பதே நிகர்சனமான உண்மையாகும்.

நாமெல்லோரும் நமக்குத் தெரிந்து வளர்ந்த காலகட்டத்தில் அம்மாக்கள், பாட்டிகள்  கொடுத்த உணவுகள் பெரும்பாலும் பிள்ளைகளின் உடல் ஆரோக்யத்தோடு வளர்சிதை மாற்றத்தையும் முறையாக வைத்திருக்க உதவி செய்தன என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக அந்த காலகட்டத்தில்  உளுந்தங்களி, ராகிக்களி போன்ற தானியங்களை கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுடன்  நல்லெண்ணெய் , வெல்லம் சேர்த்து பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தனர். அதோடு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல், பச்சையான நாட்டு முட்டை என ஆரோக்யம் சார்ந்த உணவுகளையே  உட்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். 

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மிக குறைவாகவே கிடைத்து வருகிறது. இதற்கு பொதுவான காரணம், ஏன் முக்கியமான காரணம் கூட பெற்றோர்கள் தான்.

பணத்துடன் கூடிய வாழ்வில் தனிமையை விரும்பும் தம்பதிகள் முதலில் தனிக்குடித்தனம் என்னும் தனிமையான வாழ்வைத் தேடிக்கொள்கின்றனர். அவ்வாறு செல்வதால் பாட்டி தாத்தா என்னும் உறவுகளை குழந்தைகள் அறிவதே இல்லை.

இதற்கும், முன்கூட்டியே பூப்பெய்துவதற்கும் என்ன தொடர்பு?.. தொடர்பு  இருக்குங்க.. பாட்டியின் பக்குவமான அரோக்ய உணவை தனிக்குடித்தினத்தால் மிஸ் செய்கிறார்கள் நமது குழந்தைகள்.

அத்தோடு தாய் தந்தை இருவரும் பணிக்கு செல்லும் நிலையில் தனிமையில் இருக்கும் குழந்தை துரித உணவு முதல், செல் போன், தொலைக்காட்சி என்னும் அபாயங்களில் மாட்டிக்கொள்வதுடன், வெளியில் சென்று விளையாடுவதான் மூலம் சூரிய ஒளியிலிருந்து  கிடைக்கும் நன்மைகளையும்  இழந்து வருகின்றனர், இதனால் அதிக உடல் பருமனுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் குழந்தைகள்.  மேலும் விட்டமின் டி குறைபட்டால் முன்கூட்டியே குழந்தைகள் பூப்படைந்து விடுகின்றனர்.

தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி?

பூப்பெய்தல் எப்போது நிகழ வேண்டும்?

மூளையில் உள்ள 'ஹைப்போ தாலமஸ்’ மற்றும் பிட்யூட்டரி என்னும் சுரப்பிகளின் தூண்டலினால் சினைப் பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் பூப்பெய்துவதற்கு முக்கியமான காரணம்.  இந்த பூப்பெய்தல் நிகழ்வுதான் இனப்பெருக்கதிற்கான முக்கிய நிகழ்வு.  

பூப்பெய்துவதற்கு முன்னர் பிள்ளைகளின் உடம்பில் சில மாற்றங்கள் நிகழும் அதாவது, பூப்பெய்துவதற்கு முன்னால்  உயரம் அதிகரிக்கும். மார்பகங்கள் வளர்ச்சியடையும் அதோடு, அக்குள், இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் முடி வளரத் தொடங்கும்.

பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் பூப்பெய்துவர். ஆனால் அதை பெற்றோர் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? ஆண் பிள்ளைகள் பருவமடைந்த பின்னர் குரல் மாற்றம், மீசை முளைத்தல், இனப்பெருக்க உறுப்பில் முடி வளர்தல் ஆகிய மாற்றங்களை சந்திப்பர்.

முன் கூட்டியே பூப்பெய்தலுக்கு காரணமானவை;

தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி?

துரிதம் என்றால் விரைவு என அர்த்தம் , இவ்வாறு விரைவாக சமைக்கப்பட்டு உண்ணப்படும் உணவுகளால் விரைவாகவே பூப்பெய்தலில் துவங்கி விரைவாக நமது வாழ் நாளும் முடிந்து விடும்.

 எங்கு பார்த்தாலும்  துரித உணவு கடைகள் தான் கண்ணில் படுகின்றன. அதோடு அதன் மனமும் ருசியும் நம்மை அதன் அடிமையாக்கி விடுகிறது. இவ்வாறு மூக்கிற்கும் நாக்கிற்கும் மட்டும் நன்மை  பயக்கும் உணவுகளுக்கு அடிமையாகி,  நம் பிள்ளைகளையும் அடிமையாக்கி விடுகிறோம்.  

இது போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் இறைச்சி, அதாவது பிராய்லர் கோழிகள்... இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் கோழிகள் அபரிமிதமாகவும், விரைவாகவும் வளர்ச்சி அடைவதற்காக, அவற்றுக்கு  ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் போடப்படுகின்றன.

இதை குழந்தைகள் அதிகமாக உண்ணும்போது அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென் இரு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் விரைவாக பூப்பெய்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்  பூப்பெய்தலுக்குக் காரணமான ஹார்மோன்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே தூண்டப்பட்டு வருகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாசனை திரவியம், நகப்பூச்சு, பற்பசை, சோப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிலேட்ஸ் (phthalates), பாராபின்ஸ் (parabens), பினோல்ஸ் (phenols) ஆகிய மூன்று ரசாயனங்கள் பெண் குழந்தைகள் முன்னதாகவே பூப்பெய்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது' என்று கண்டறிந்துள்ளனர் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.  

அதோடு, இந்த அபாயத்தை உண்டாக்கும் ரசாயனங்கள்  அன்றாட வாழ்வில் சாதாரணமாக புழங்கும் பிளாஸ்டிக் பொருள்களிலும் உள்ளன. இது போன்ற பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுடன், முடிந்தவரை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாத உணவு பொருட்களையே உட்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  

குழந்தைகளை கல்வியோடு சேர்த்து வெளிப்புற விளையாட்டுக்களையும் பாதுகாப்பாக விளையாட கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அந்தந்த வயதிற்கேற்ற முறையான வளர்ச்சியை குழந்தைகள் பெறுவர்.

இதனால் பிற்காலத்தில் சந்திக்க போகும் ஆபத்துகள்:

தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி?

முன்கூட்டியே பூப்பெய்துவதால் சிறு வயதிலேயே பாலுணர்வு தூண்டப்படுகிறது.இதனால் பல சமூக சீர்கேடுகள் நிகழும் வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஈஸ்ட்ரோ ஜென் ரத்ததை அடர்த்தியாக்கும் இதனால் முன் கூட்டியே பூப்பெய்த பெண்கள் மார்பக புற்றுநோய், இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட அபாயங்களை சந்திக்க நேரிடும்.

முன் கூட்டியே பூப்பெய்த பிள்ளைகளுக்கு திருமணதிற்கு பிறகு பிள்ளைப்பேறு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். 

மாதவிடாய் நிற்கும் வயதும் குறைந்து முன்கூட்டியே அதாவது 40 வயதிலேயே  மாதவிடாய் நின்று விடும்.

முன்கூட்டியே பூப்படையும் பெண்பிள்ளைகள் மற்றவர்களிடம் தனிமைப்படுத்தப்படுவதால், தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். இதனால் கவனம் இன்மை, கற்றல் குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.

மாதவிடாய் பற்றி என்னவென்றே அறியாத பெண்பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு எப்படி இருக்கும்.. இதனால் பல்வேறு தொற்றுகளால் பெண் பிள்ளைகள் பாதிப்படைவார்கள். 

நம் வாழ்வில் நாம் செய்யவேண்டியன, முதலில் பிராய்லர் கோழி உண்பதை தவிர்ப்போம். குழந்தைகளுக்கு அதை கொடுப்பதையும் நிறுத்துவோம். இரண்டாவதாக ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் உணவு வகைகளைத் தவிர்ப்போம். மேலும் ஜங்க் ஃபுட் எனப்படும் கடைகளில் தயாரித்து விற்கப்படும் உணவு வகைகளைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும்.

சற்றே சிரமம் போல் தோன்றினாலும் பெரிய சிரமமான விஷயமல்ல அது. அதுமட்டுமின்றி பணம், பணம் என்று அலையாமல் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்தால் நம் தேவைகள் குறையும். பணத் தேவையும் குறையும். அதுமட்டுமின்றி நாம் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரமும் கட்டாயம் அதிகரிக்கும்.

நம் வாழ்வதே குழந்தைகளுக்காகத்தான் என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் தற்போதைய நகரமயமாக்கல் கலாசாரத்திலிருந்து நாம் நிச்சயம் விடுபட்டு நிம்மதியான வாழ்வு மட்டுமின்றி, குழந்தைகளின் நல்லதொரு எதிர்காலத்தையும் நாம் நிச்சயம் உறுதி செய்ய முடியும். முயற்சித்துதான் பார்ப்போமே.

எழுதியவர்: கண்மணி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP