உணவில் ரசாயனம்: விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள் தெரியுமா?

மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
 | 

உணவில் ரசாயனம்: விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள் தெரியுமா?

உலகமே கைக்குள் என்ற நிலைமை வந்துவிட்டது. விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் புதிது புதிதாக வரும் நோய்களை வெல்ல எந்த அறிவியலாலும் முடியவில்லை. இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று பலருக்குத் தெரியவில்லை. மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 

உதாரணமாக கறிவேப்பிலையைக் குறிப்பிட்டாலும் சமீப காலங்களில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை எல்லாவிதமான காய்ச்சலையும் விரட்டுவதில் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும். பன்றிக்காய்ச்சலுக்கும், எலிக்காய்ச்சலுக்கும்... ஏன் வவ்வால் மூலம் பரவியதாகச் சொல்லப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சலுக்கும்கூட இந்த கறிவேப்பிலை மருந்து நல்ல நிவாரணம் தரும். பலருக்கும் இந்த மருந்து பலனளித்தது, பலன் தந்து கொண்டிருக்கிறது.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசி விட்டு குலுங்கிக் குலுங்கி நடப்பானாம். என்றும் இளமையுடன் வாழ திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது காலையில் இஞ்சியை சாறு எடுத்து குடிப்பது, டீயில் இஞ்சி சேர்த்துக் குடிப்பது, இஞ்சித் துவையல் செய்து சாப்பிடுவது, இஞ்சி ஜூஸ் குடிப்பது என அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும். இதேபோல் சுக்குடன் மிளகு, தனியா சேர்த்துப் பொடியாக்கி மாலை நேரத்தில் டீக்குப் பதிலாக அந்தக் கலவையை கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிப்பதன்மூலம் செரிமானக் கோளாறில் தொடங்கி இதயம் தொடர்பான நோய்கள், சளித்தொல்லை என நிறைய நோய்கள் சரியாகும். இதேபோல் இரவில் கடுக்காயை (விதையை நீக்கிவிட்டு) இரவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும், மூல நோய் விலகும்.

வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு என எல்லாமே மருந்துதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிலர் கேட்கலாம், அப்படியானால் தினமும் அந்த மருந்துகள் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே செய்வதில்லை. ஏன், எங்களுக்கு சுகர் வருகிறது, பிரஷர் வருகிறது, புற்றுநோய் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் அந்த மருந்துகளையும் சாப்பிடுகிறீர்கள். கூடவே, பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடுகிறீர்கள், பல்வேறு ரசாயனங்களைப் போட்டு பிளீச் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தினம் தினம் சாப்பிடுகிறீர்கள், கல் உப்புக்குப் பதில் அயோடின் சேர்த்த உப்பு என்று யார் யாரோ சொல்வதைக் கேட்டு பொடி உப்பைச் சேர்க்கிறீர்கள், பெட்ரோல் எடுத்ததுபோக மிச்சமாகிப்போன குருடாயிலில்  தயாரித்த எண்ணெய்களில்தானே தினம் தினம் வறுக்கிறீர்கள், பொரிக்கிறீர்கள், வடை செய்கிறீர்கள், பூரி போட்டு சாப்பிடுகிறீர்கள். இப்படி விஷமாகிப்போன உணவுகளை ஒவ்வொருவேளையும் சாப்பிடும்போது நீங்கள் எத்தகைய விலைஉயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் நோய்கள் வரிசைகட்டி நிற்கத்தான் செய்யும்.

இதுமட்டுமல்ல வாரம் ஒருநாள்தான் நான்வெஜ் என்று சொல்லிக்கொண்டு ஊசி போட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் சிக்கனைச் சாப்பிடுகிறீர்கள். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தைச் சாப்பிடுகிறீர்கள், பூச்சிமருந்தில் முக்கி எடுத்த திராட்சைப்பழத்தைச்  சாப்பிடுகிறீர்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவரைச் சாப்பிடுகிறீர்கள். இவற்றில் உள்ள விஷங்கள் உங்களை பாதிக்காமல் என்ன செய்யும்? இன்னும் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஒவ்வாத உணவுகளை வேண்டி விரும்பிச் சாப்பிடுகிறோம். டீக்கடையில் தேயிலையில் கலப்படம், அன்றாடம் அருந்தும் பாலில் கலப்படம் என எல்லாம் கலப்படம், ரசாயனம்... அவ்வளவும் நமக்கு நோயை வரவேற்க காரணமாகிறது.

இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முதலில் நம்மிடையே பொதுவான விழிப்புணர்வு வேண்டும். முன்பைக்காட்டிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும் செயலாக்கத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனா அந்த விழிப்புணர்வு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராமிலேயே நின்றுவிடுகின்றன. அதாவது பார்க்க, பகிர, கருத்து சொல்ல என முடிந்துவிடுகிறது. வீட்டுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஓட்டல் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். அங்கே சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவில் தொடங்கி உங்களுக்கு பார்சல் போட்டு கொடுக்கப்படும் பாலித்தீன் பேப்பர் வரை எல்லாம் உயிர்க்கொல்லிகள். சிந்திப்போம். நோய்களை வெல்ல எளிய வழிகள் நிறைய இருக்கின்றன.

தலை வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி (இழைத்து) நெற்றியில் பற்று போடுங்கள், ஜலதோஷம் வந்தால் மணத்தக்காளி சூப் குடியுங்கள். மூக்கில் நீர் வடிந்தால் நொச்சியிலையை கொதிக்க  வைத்து ஆவி (வேது) பிடியுங்கள். சளி பிடித்தால் வெள்ளைப்பூண்டு பாலில் (சிறிது நீர் சேர்த்து) வேக வைத்து மிளகுப்பொடி, மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் குடியுங்கள் குணம் கிடைக்கும். இவை மட்டுமல்ல கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என வலிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்ல ஆண்மைக்கே சவால் விடும் பிரச்னைகளும் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன. இவைதவிர பொதுவாக நமது உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், புற்றுநோய் என  நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கை நிறைய காசு இருக்கிறது. ஆனால் அவற்றைக் கொண்டு நோய்களை விரட்ட முடியவில்லை. நோய்களை விரட்ட சரியான ஆட்களும் இல்லை. நோய்களுக்கேற்ப மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள், ஆனால் அவர்களிலும் பலர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கையில் கிடைத்ததை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கோ தயாரித்த மருந்துகளைக் கொடுத்து நம்மை சோதனை எலிகளாக்கி எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் நோய் குணமாவதற்குப்பதிலாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. அன்றைக்கு 100 மில்லி கிராம் குரோசினைச் சாப்பிட்டால்  காய்ச்சல் விலகியது. இன்றைக்கு 600-ஐத் தாண்டியும் நம்மிடம் சவால் விடுகிறது காய்ச்சல். எது வந்தால் என்ன? இயற்கையாக நம்மைச் சுற்றி மிக எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நோய்களை வெல்லலாம். 

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP