டீன் ஏஜ் சிக்கல்கள் 4 - விலகும் பிள்ளைகள்... கவனம் அவசியம்!

டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பை விட, நண்பர்களின் பாசம்தான் பெரிதாகத் தெரியும்.
 | 

டீன் ஏஜ் சிக்கல்கள் 4 - விலகும் பிள்ளைகள்... கவனம் அவசியம்!

கணவனும் மனைவியும் தனியார் வங்கியில் வேலை செய்கிறார்கள். மனைவி உயர் பொறுப்பில் இருக்கிறார் என்பதால் வீட்டுக்கு வருவதற்கு தாமதம் ஆகும். ஆகையால் தங்கள் இரு பிள்ளைகளுக்கும் மாலையில் உணவு சமைத்துக் கொடுப்பதற்கு ஒரு ஆயாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்லூரி முடித்து வரும் மூத்த மகன் வீட்டில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாப்பாடு சாப்பிட்டு விட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுவான். ஆரம்பத்தில், இதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் பெற்றோர்.

ஆனால், ஒரு கட்டத்தில் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்ளும் மகனை காண்பதே அரிதாக இருக்கிறதே என்று நினைத்தார்கள். வேலை பளுவில், 'மகன் எப்படியோ ஒழுங்காக இருந்தால் சரி' என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வேலையயின் பின்னாடி ஓடிக்கொண்டு இருந்தார்கள். 

ஒருநாள் இரண்டாவது மகன் வந்து அம்மாவிடம், ''அம்மா, அண்ணா ரூம்ல இருந்து டிஃபரன்டா ஸ்மெல் வருது, நைட்ல ஒழுங்கா சாப்பிடுறது இல்ல, நான் எதாச்சும் கேட்டா அடிக்கிறான், திட்டுறான். அவன் பிஹேவியரே சரியில்ல'' என்று கூறியிருக்கிறான்.

அதன்பிறகுதான் அவனது அம்மா அவனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளார். எப்போதும் அறையை மூடியே வைத்திருக்கும் மகனின் நடத்தையைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், மகனிடம் இது பற்றிக் கேட்க, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை' என பதில் சொல்லியிருக்கிறார். இருந்தபோதும் அந்த பதிலை நம்பாமல் மகனை கண்காணித்தபோது, அவனது அறையில் போதை மருந்துகள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியான அவர், மகனை உரிய நேரத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, போதைப் பழக்ககத்தில் இருந்து மகனை ஒருவழியாக மீட்டுள்ளார். தன் அன்பு மகன் போதைக்கு அடிமையானபோது அவர் வயது வெறும் 19 தான். 

தமிழ்நாட்டில் இன்று 14 வயது சிறுவன் கூட போதைக்கு அடிமையாகி இருக்க்கிறான் என்பதுதான் பெரும் துயரம். அதற்கு தெருக்கள்தோறும் திறந்து வைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்ல காரணம். மது அல்லாத மற்ற போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் அளவுக்கு சில சமூக விரோதிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதற்கு நம் வீட்டுக் குழந்தைகள் பலிகடா ஆகிவிடுகிறார்கள். 

பெரும்பான்மையான பெற்றோர்கள், 'என் மகன் / மகள் குழந்தைகள். அவனுக்கு ஒண்ணும் தெரியாது', 'எம்புள்ள அப்படி பண்ண மாட்டான்' என்று நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையில் தவறு இல்லை. ஆனால், டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பை விட, நண்பர்களின் பாசம்தான் பெரிதாகத் தெரியும். அந்த நேரத்தில் நண்பர்கள் செய்யும் எல்லா செயல்களையும் நாமும் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும். அந்த ஆசைதான் இப்படி பல துர்விஷயங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் உண்மை.

நண்பர்களின் சேர்க்கையோடு, பெற்ரோர் கொடுக்கும் அதீத சுதந்திரமும் மற்றொரு காரணம். பிள்ளைகள் எத்தனை ரூபாய் கேட்டாலும் திட்டிக்கொண்டே அதைக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். 

'உன் தேவை என்ன… அதற்கு எத்தனை ரூபாய் வேண்டும்' என்பதை தீர விசாரித்து கொடுப்பதே நல்லது. பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பது அவர்களுக்கான தண்டனை அல்ல… அவர்கள் சீராக வளர தெளிக்கப்படும் ஊக்க மருந்து என்பதை பெற்றோர் முதலில் நினைவில் நிறுத்துவது அவசியம். 

'என் சின்ன வயசிலே இதெல்லாம் எனக்கு கிடைக்கவே இல்ல… என் பிள்ளைக்காவது அது கிடைக்கட்டும்' என்று கண்மூடித்தனமாக அன்பு என்ற பெயரில் பணத்தையும் பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுத்தால் பிள்ளைகள் தவறானப் பாதைக்கு செல்வதற்கு பெற்றோரே ரோடு போட்டுக் கொடுக்கிறோம் என்று அர்த்தம். அந்த ரோட்டில் வேகமாகப் போகும் பிள்ளை, எந்த விபத்திலும் சிக்காமல் இருக்க வேண்டும் எனில், கொடுக்கும் காசுக்கு பிள்ளைகளிடம் கணக்குக் கேளுங்கள். பிறகு அது அவர்களிடம் பண மேலாண்மை என்ற பண்பை வளர்க்கும். 

அன்பை எண்ணிப் பார்க்காமல் கொடுங்கள். பிள்ளைகள் சீரான வழியில் செல்வார்கள்.

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

முந்தைய அத்தியாயம்: டீன் ஏஜ் சிக்கல்கள் 3 - பிள்ளைகள் நேரத்துக்கு வீடு திரும்புவது இல்லையா?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP