டீன் ஏஜ் சிக்கல்கள் 2 - உங்கள் பிள்ளைகளுக்கு செல்போனே கதியா?

செல்போனும் கையுமாக அலையும் பிள்ளைகளிடம் சில கண்டிஷன்களை அமல்படுத்தியே ஆக வேண்டும்.
 | 

டீன் ஏஜ் சிக்கல்கள் 2 - உங்கள் பிள்ளைகளுக்கு செல்போனே கதியா?

வீட்டில் ஒரு டீன் ஏஜ் பையனோ, பொண்ணோ இருந்தால் கண்டிப்பாக அவர்கள் கையில் ஒரு செல்போன் இருக்கும். அந்த செல்போனே உயிர் என நினைத்து மறைதிரை (Virtual) உலகத்துடன் எப்போதும் உறவாடிக் கொண்டிருப்பார்கள்.

செல்போனில் விதவிதமான விளையாட்டுக்களை டவுன்லோட் செய்து தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் தன்னை ஒரு மாவீரன் போல் பாவித்து கண்ணுக்குத் தெரியும் அந்தச் சின்ன உருவத்துடன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவார்கள். ஒவ்வொரு விளையாட்டிலும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் ஸ்கோர் செய்து இருப்பார்கள். அந்த ஆயிரம் ஸ்கோரால், பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தாலும் விடாது கருப்பாக அந்த செல்போன் விளையாட்டுக்களை இரவும் பகலுமாகத் துரத்திக் கொண்டிருப்பார்கள். 

இதைப் பார்க்கும் பெற்றோருக்கு தலைக்கு கோபம் சுர்ரென்று ஏறும். 'எப்ப பாரு அந்த செல்போனையே கட்டிட்டு அழு' என்று வார்த்தைகள் வெடிக்கும். அப்போதும் பிள்ளைகள் கண்டுகொள்ள மாட்டார்கள். இது ஒரு ரக பிள்ளைகள். 

இன்னொரு ரகம் இருக்கிறார்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் எப்போதும் டெக்ஸ்ட் பண்ணிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள், எதற்காக பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் நேரடியாகக் கேட்டால், 'ஃபிரண்டு கூடத்தான் பேசிட்டு இருக்கேன்' என மிக சாதாரணமாகச் சொல்வார்கள். யார் அந்த ஃபிரண்ட்? எதற்காக 24 மணி நேரமும் அவனுடன் அல்லது அவளுடன் உரையாட வேண்டும் என பெற்றோர் பயத்தில் மூழ்குவார்கள்.

'என்னடா தம்பி, எப்பப் பாரு யார்ட்டயோ பேசிக்கிட்டே இருக்க... என்னடா நடக்குது' என கேள்வி கேட்டால், 'நீங்க என்ன சந்தேகப்படுறீங்களா? என்னை நம்ப மாட்டீங்களா?' என எதிர்கேள்வி கேட்பார்கள். அது இறுதியில் வீட்டுக்குள் பெரும் பிரச்னையாகும். அதுவும் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள் 'செல்போனே எல்லாம்' என வளருகிறார்கள்.

 இந்த செல்போன் விளையாட்டுக்கள் மூலம் 'ப்ளூவேல் கேம்' தற்கொலைகள் நடந்தது பெற்றோரை பீதிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். செல்போன் மூலம் எந்த ரூபத்தில் பிரச்னை வரும் என்பதை பெற்றோராலும் பிள்ளைகளாலும் தீர்மானிக்க முடியாது என்பதுதான் உண்மை.

செல்போன், கம்யூட்டர், இணையம் என்கிற தொடர்பு சாதனங்களால் பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. குறிப்பாக, செல்போன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகிறார்கள். இரண்டாவது குடும்பத்தில் இருக்கும் உறவுகளோடு பேசுவதையும் சந்தோஷமாக உரையாடுவதையும் குறைத்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் சமூகப் பிணைப்புடன் வாழ்வதிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

மீட்பது எப்படி?

பள்ளியில், கல்லூரியில் நன்கு படித்துக்கொண்டு, அங்கு கொடுக்கும் வேலைகளைச் சரிவர செய்து பிறகு செல்போன், கம்யூட்டரை பயன்படுத்தும் பிள்ளைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஆனால், ஒரு பெற்றோராக அவர்கள் இந்த சாதனங்கள் வழியே என்ன கற்றுக்கொள்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என அவர்கள் அறியாத வண்ணம் அவ்வப்போது கண்காணிப்பது அவசியம்.  பிள்ளைகளிடம், இப்படி கண்காணிப்பது பெற்றோராக என் கடமை என்பதை புரியவைப்பது முக்கியம்.

செல்போனும் கையுமாக அலையும் பிள்ளைகளிடம் சில கண்டிஷன்களை அமல்படுத்தியே ஆக வேண்டும். சாப்பிடும் போதும் படிக்கும்போதும் செல்போனைத் தொடக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு அவர்கள் கட்டுப்படாவிட்டால், 'உன் செல்போன் பில்லை நீயே கட்டிக்கொள்' என்று கண்டிப்புடன் பேச வேண்டும். அதேபோல், படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரம் முன்பாக கம்யூட்டர், செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. 

மேலும், பிள்ளைகள் தனியே உறங்கும் அறையில் கம்ப்யூட்டர் வைக்காமல் இருப்பது உத்தமம். சில பெற்றோர்கள் மகன் அல்லது மகள் கையில் காஸ்ட்லி செல்போன் இருப்பது அந்தஸ்து சம்ப்ந்தமான விஷயம் என நினைக்கிறார்கள். பெற்றோர்கள் முதலில் அந்த மாயையில் இருந்து வெளியே வர வேண்டும். 

'வெளிய போற எம்பையன் நைட்டு ரொம்ப லேட்டாத்தான் வீட்டுக்கு வர்றான்' என்று கவலைப்படும் பெற்றோருடன் அடுத்து சந்திப்போம்.

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

முந்தைய அத்தியாயம்: டீன் ஏஜ் சிக்கல்கள் 1 - உங்களை பிள்ளைகள் வெறுக்கிறார்களா? 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP