தெய்வம் அன்றே கொல்லும்…

”சும்மா இருப்பவர்களை தேடிச் சென்று வம்பிழுத்து அவர்களை துன்புறுத்தி மகிழ்ந்தாயே .. இன்று நீ துன்பப் படுவதை கூட நம்பாமல் விலகிச் செல்வதைப் பார்த்தாயா... இனியாவது யாருக்கும் தீங்கு செய்யாதே”
 | 

தெய்வம் அன்றே கொல்லும்…

சின்னாம்பட்டி என்னும் ஊரைச் சுற்றி காடுகள் இருந்தது. அந்த ஊரின் பண்ணையாருக்கு வாலிப வயதில் ஒரே மகன். அவ்வப்போது மக்களை சீண்டிக் கொண்டே இருப்பான். நிலத்தில் மக்கள் வெயில் பாராமல் வேலை செய்யும் போது ஐயையோ.. ஐயையோ.. யானை வருதே என்று அலறுவான்.  எல்லோரும் வேலையைவிட்டு அலறி அடித்து  ஓடி விடுவார்கள். இவன் அமர்ந்த இடத்தில் இடி இடியென சிரிப்பான். இப்படியே ஊரில் இருக்கும் பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நடுங்கச் செய்வான்.

தயிர் பானை கொண்டு வரும் பாட்டியை ஆடுவந்து முட்டுகிறது என்று கீழே  விழவைத்து விடுவான். பானை உடைந்து பாட்டி கதறி அழுவதைப் பார்த்து கைதட்டி சிரிப்பான். இப்படி எல்லோரையும் ஏமாற்றினால் நாளை உண்மையில் ஏதாவது வந்தாலும் உன்னை யாரும் நம்பமாட்டார்கள் என்று கூறி  அறிவுரை  செய்த பெரியோர்களை அலட்சியம் செய்தான். 

ஊரில் பெரும்பான்மையான மக்கள் பண்ணையாரை நம்பியே வாழ்வதால் அவர் மகன் செய்யும் அட்டூழியங்களைப் பொறுத்துக்கொண்டார்கள்.  இவன் செய்யும் ஒவ்வொன்றையும் காட்டின் அருகில் வாழ்ந்த தேவதை தக்க சமயத்தில் இவனுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்று முடிவு செய்தது.   

ஒருநாள் காட்டுவழியே பண்ணையார் மகன் வந்துகொண்டிருந்தான். இதுதான் சமயம் என்று தேவதை அகோர முகத்துடன் பூதம் போல் அவன் முன்பு வந்து நின்றாள்... ”உன்னை சாப்பிட போறேன்” என்ற மிரட்டலுடன் துரத்தினாள். பின்னங்கால் பிடற ஓடியவன் ஊருக்குள் வந்தபிறகே நின்றான். மக்களுக்கு ஒரே ஆச்சர்யமாகிவிட்டது. அட இவன் நம்மை பயமுறுத்திதானே பழக்கம்.

இவனாவது பயப்படுவதாவது என்று தங்கள் வேலையைக் கவனிக்க தொடங்கினார்கள். பூதம் வருகிறது.. பூதம் வருகிறது என்று தட்டுத்தடுமாறி... சொல்ல வந்ததை சொன்னான். ஆனால்  யாருமே அவன் புறம் திரும்பவில்லை.. பூதம் போல் வேடமிட்ட தேவதை அவனை நெருங்கி வந்தது... வந்துவிட்டது.. என் பக்கத்தில் வந்துவிட்டது என்று அஞ்சியபடி பதுங்கினான். மக்களுக்கு அவன் செய்கைகள் குழப்பத்தை உண்டாக்கியது.  நம்மை தானே அலரவைப்பான்.. இப்போது என்ன என்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தார்கள். 

உங்கள் கண்ணுக்கு பூதம் நிற்பது தெரியவில்லையா.. ஐயையோ என்னை துரத்துகிறதே என்று சுற்றி சுற்றி ஓடினான். பைத்தியம் பிடித்துவிட்டது போல என்று ஏசினார்கள். ”இப்படித்தானே அவர்களைப் பயமுறுத்தினாய்.. இன்று நீ சொல்வதை யாராவது கேட்கிறார்களா பார்” என்றது பூதம் வடிவிலிருந்த தேவதை.. ”தப்பு செய்துவிட்டேன். இனி யாரையும் பயமுறுத்த மாட்டேன்.. என்னை விட்டுவிடேன்” என்று கெஞ்சினான். 

அதன்பிறகே பூத வடிவிலிருந்த தேவதை தன் சுய உருவத்துக்கு வந்து அனைவரது கண்களுக்கு தெரிந்தது. மகிழ்ந்த மக்கள் தேவதையை வணங்கினார்கள். ”சும்மா இருப்பவர்களை தேடிச் சென்று வம்பிழுத்து அவர்களை துன்புறுத்தி மகிழ்ந்தாயே .. இன்று நீ துன்பப் படுவதை கூட நம்பாமல் விலகிச்  செல்வதைப் பார்த்தாயா... இனியாவது யாருக்கும் தீங்கு செய்யாதே” என்று மறைந்தது.. 

அன்று முதல் பண்ணையார் மகனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.  மக்களிடம் அன்பாக பழகினான். பிறரது துக்கத்தில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் துக்கத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக நடந்து கொண்டால் மீளவே முடியாத துன்பத்தில் சிக்கிவிடுவோம்... இறைவன் நின்று இல்லை அன்றே கொல்லும் கலிகாலம் இது. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP