சக்தி பீடம் - 23 கல்கத்தா காளி கோயில் 

உக்ரமான காளியாக இருந்தாலும் சாந்த சொரூபியான அம்பிகையாக இருந்தாலும் பக்தர்களுக்கு நன்மையே அருளுவாள் என்பதால் வாழ்நாளில் ஒரு முறையாவது கொல்கத்தா காளியை தரிசித்து வாருங்கள்.
 | 

சக்தி பீடம் - 23 கல்கத்தா காளி கோயில் 

அம்பிகையின் காளி அவதாரம் மிக முக்கியமான அவதாரம். அசுரர்களையும் தீமைகளையும் வதம் செய்வதற்கு அம்பிகை தமது ஆவேசத்தைக் காட்டியபடி அருள்பாலிக்கும் திருமுகம். அதே நேரம் கொடூர அசுரன்களைத் தாண்டி பக்தர்களுக்கு வேண்டுவன அருளும் கனிவானவள். சக்தி பீடங்களில் ஒன்றான கல்கத்தா காளி கோயில் உத்ர சக்தி பீடம் ஆகும்.

தேவியின் வலதுகால் விரல்கள் விழுந்த இடமாக இது குறிப்பிடப்படுகிறது. இது மேற்கு வங்கத்தின் தலைநகர் கல்கத்தாவில் காளிகாட் என்னும் இடத்தில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. உலகெங்கிலும் காளி கோயில் என்றாலே அது கல்கத்தா காளி தான் என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்ற தலமாக இது விளங்குகிறது.

தலவரலாறு:

கங்கையும் வங்கக்கடலும் இணையும் இடம் கங்காசாகர் என்றழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் இங்கு கபிலமுனிவர் வசித்துவந்தார். ஒரு முறை காபாலிக சன்னியாசிகள் கங்காசாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க வந்தார்கள். அவர்கள் வரும் வழி முழுவதும் அடர்ந்த காடுகளைக் கொண்டி ருந்தது. ஓரிடத்தில் விரல்கள் வடிவில் ஓர் அதிசயப்பாறையை கண்டார்கள். அந்தபாறை பார்க்க அம்மன் போல் இருக்கவே அவர்கள் நரபலி கொடுப்பதை மனதில் நினைத்து அந்தப் பாறையை அங்கேயே வைத்து வழிபட்டார்கள். அப்படி அவர்களால் பிரடிஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே இன்று காளிகாட் அம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இத்தலத்துக்கு மற்றுமொரு புராணக்கதையும் உண்டு. இத்தலம் உருவாவதற்கு முன்பு இந்த இடமே முட்புதர்கள் நிறைந்த அடர்ந்த காடுகள் போன்று இருந்து வந்தது. தேவியின் உபாசகன் ஆத்மராம் என்பவன் பாகீரதி கரையில் தேவியை நினைத்து கண்களை மூடி தியானம் செய்த போது கண்களைப் பறிக்கும் ஒளிக் கதிர் ஒன்று அவன் முன் தோன்றியது.

அந்த ஒளி வந்த இடத்தை நோக்கி வந்து பார்த்த போது அந்த நீருக்குள் அடியில் மனிதனின் கால்விரல்கள் போல் வடிவமைக்கப்பட்ட சிறு கல் ஒன்று இருந்தது. அவன் கனவில் கண்ட தாட் சாயிணியின் கால் பாதங்களில் இருந்த விரல்கள் போல் இருக்கவே அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களில் ஒட்டி பூஜை செய்து வழிபட தொடங்கினான். அந்தப் புனித இடம்தான் இன்று காளி வீற்றிருக்கும் இடம் என்றும் சொல்லப்படுகிறது.

தேவியின் விரல் பாதம் இருந்த இடத்தில் சிவலிங்கமும் கிடைக்கவே நகுலேஷ்வரர் என்னும் பெயரோடு அவரையும் தேவியின் அருகில் வைத்து வழிபட்டான். விரல் போன்ற அமைப்பை போன்ற கல் வெள்ளிப்பேழைக்குள் வைக்கப்பட்டு இன்றும் காளி மாதாவின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

தலசிறப்பு:

காளி இடதுமேற்கரத்தில் மகாபத்ராத்மஜன் எனும் கத்தி, கீழ்க்கையில் இரத்தம் சொட்டும் அசுரனின் தலை, வலது மேற்கரத்தில் அபயமுத்திரை, கீழ்க்கரத்தில் வரமுத்திரை என ஏந்தி நிற்கிறாள். மண்டையோட்டை மாலையாக தரித்து கருமை நிறத்தில் விழிகள் நெருப்பு பொறிகளாய் மின்ன காணும் பகைவர்கள் எவராயினும் நடுங்கும் விதத்தில் காட்சியளிக்கிறாள். காளிமா தேவியின் கழுத்தில் 51 கபால மாலைகள், ஸப்த கோடி மகாமந்திரங்களுக்கும் பிரதானமான 51 மாத்ருகா அக்ஷரங்கள் என்று நம்புகிறார்கள்.

அசுரனை வதம் செய்த ஆவேசத்தில் அவளை சாந்தமாக்க செய்த அனைத்து முயற்சியும் பலனின்றி போக சிவபெருமான் அவளை சாந்தப்படுத்த அவள் வரும் வழியில் படுத்துவிட்டார். வேகமாக வந்த காளி தன் கால் இடறி சிவன் மீது பட்டதும் தவறை உணர்ந்து நாக்கை கடிக்க அந்த நிலையே காளியின் உருவமாயிற்றது என்கிறது புராணம்.

சிவப்பு நிற ஆடையில் அலங்கரிக்கப்பட்டு ஈசனைப் போல் முக்கண்களோடு தங்கத்தில் செய்த நாக்கை வெளியில் தொங்கவிட்டு கொடூரமாக காட்சியளித்தாலும் வேண்டி வரும் பக்தர்களுக்கு அன்போடு அருளுகிறாள். தேவியின் இருபுறங்களிலும் நகுலேஷ்வர் என்னும் பைரவரும், கங்கைநதியும் இருப்ப தால் இத்தலம் காசியை நினைவுப்படுத்துகிறது.

உக்ரமான காளியாக இருந்தாலும் சாந்த சொரூபியான அம்பிகையாக இருந்தாலும் பக்தர்களுக்கு நன்மையே அருளுவாள் என்பதால் வாழ்நாளில் ஒரு முறையாவது கொல்கத்தா காளியை தரிசித்து வாருங்கள். 

newstm.in
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP