சக்தி பீடம் -25  மாணிக்காம்பாள் 

சக்திபீடங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஆந்திராவில் இருக்கும் அம்பிகையின் மாணிக்க சக்தி பீடமான திராக்ஷாராமா. தற்போது ராஜமுந்திரி என்றழைக்கப்படும் இத்தலத்தை தக்ஷிணகாசி என்றும் அழைக்கிறார்கள்.
 | 

சக்தி பீடம் -25  மாணிக்காம்பாள் 

சக்திபீடங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஆந்திராவில் இருக்கும் அம்பிகையின் மாணிக்க சக்தி பீடமான திராக்ஷாராமா. தற்போது ராஜமுந்திரி என்றழைக்கப்படும் இத்தலத்தை தக்ஷிணகாசி என்றும் அழைக்கிறார்கள். ஆந்திராவில் ஸ்ரீ சைலம், காளஹஸ்தி, திராக்ஷாராமம் என மூன்றையும் த்ரிலிங்க தேசம் என்று அழைக்கிறார்கள். அஷ்ட சதச பீடங்கள் எனப்படும் பதினெட்டு பீடங்களில் ஒன்று. இத்தலத்தை மாணிக்ய தக்ஷவாடிகா என்று அழைக்கிறார்கள். 

தலவரலாறு:
தாராகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து விழுந்தது. அந்த ஐந்து பகுதிகளில் இதுவும் ஒன்று. சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக முனிவரின் மகன் உபமன்யு இந்த இடத்தில் சிவ வழிபாடு செய்து வந்தான்.

வழிபாட்டின் போது அபிஷேகத்துக்கு பால் கிடைக்காமல் போகவே  உபமன்யு சிவபெருமானை வேண்டவே சிவனும் மகிழ்ந்து தன்னுடைய திரி சூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டினார். அந்தப் பள்ளத்தில் இருந்து பால் வந்து நிரம்பியது. மக்கள் அனைவருக்கும் தடையின்றி பால்கிடைத்ததால் இந்த ஊர் பாலகோடா என்று அழைக்கப்பட்டது.

தலசிறப்பு:
காசியைப் போலவே இங்கும் சாட்சி கணபதி அருள்கிறார். இத்தலத்தில் நர்த்தன கணபதியும் அருள் பாலிக்கிறாள். இத்தலத்தில் க்ஷேத்திர மூர்த்தியாக லஷ்மி நரசிம்மர் அருள் பாலிப்பதால் இங்கு பக்தர்கள் திருமண சுப விசேஷங்களை நடத்துகிறார். பிரகாரம் திரும்பும் இடத்தில் தேவர்களால் கட்டப்பட்ட சிறிய கோயில்  செங்குஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. நான்கு யுகங்களில் நடக்கும் கலியுகத்தின் முடிவு காலங்களில் மனிதன் குட்டைவிரல் அளவு இருப்பான் என்கிறது புராணம். அப்போது அவர்கள் தரிசிக்கவே இந்த சிறிய கோயில் என்கிறார்கள்.

இங்கு சூரியபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை வணங்கினால் சகலவித சனி தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம். இங்கு பளிங்கு கல்லால் ஆன 15 அடியில்  மிக உயர்ந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. லிங்கத்தின் பின்புறமாக மூன்று கோடுகள் உண்டு. அதற்கு ஜடா மகுடம் தரித்து அலங்கரிக்கிறார்கள். இவருக்கு வலதுபுறத்தில்  பத்ரகாளியும், இடதுப்புறம்  அனுமனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள் இங்கு அனுமனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது.

நம் உடலில் உள்ள பல சக்கரங்களில் மணிபூரக சக்ரத்தின் நாயகியாக மாணிக்காம்பாள் விளங்குகிறாள். ஆலயங்களில் அம்மன் முன்புதான் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அம்மன் மிகுந்த உக்ரமாக இருந்தாளாம். ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அம்பி கையின் கண்கள் மட்டும் பக்கவாட்டில் பார்ப்பது போல் அமைத்து மாற்றி னாராம். அதனால் தேவி உக்ரம் தணிந்து சாந்தமாக மாறினாள் என்கிறது தல புராணம். இங்கு தேவி ஸ்ரீ சக்ரத்தின் மீதே நின்று அருள்பாலிக்கிறாள். தேவி யின் கண்களை கண்மலர் கொண்டு அலங்கரித்திருக்கிறார்கள்.

இத்தலத்தில் செய்யப்படும் அபிஷேகம் தேவிக்கும் ஸ்ரீ சக்ரத்துக்கும் சேர்த்தே செய்யப்படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வர்ணனைக்கு எட்டாத அழகி என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் இவளை போற்றுகிறது. இவளை வழிபட்டால் லஷ்மி கடாட்சம், சரஸ்வதியின் வித்யாஞானம் இரண்டையும் பெறலாம்.

சக்தி பீடங்கள் உருவாக காரணமாக இருந்த தட்சயாகம் நடந்த இடம் இந்த ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருக்கும் சிறிய குட்டை அருகே சிறிய கோவிலில் தாட்சாயணி குடிகொண்டிருக்கிறாள். தேவிக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள், குங்குமம், சந்தனம், இட்டு பூ தூவி அர்ச்சித்து வழிபடுகிறார்கள். மகிமை வாய்ந்த மாணிக்காம்பாள் நமக்கு நலனும் பலனும் அள்ளித்தருகிறாள்.
மாணிக்காம்பாளை வழிபட்டு பலன்கள் பெறுவோம்..

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP