ஏழேழு ஜென்ம பாவங்கள் நீக்கும் ரத சப்தமி!

ஏழேழு ஜென்ம பாவங்கள் நீக்கும் ரத சப்தமி
 | 

ஏழேழு ஜென்ம பாவங்கள் நீக்கும் ரத சப்தமி!


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி

சூரிய வழிபாடு நம் இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது. சூரியனின் ஒளிக்கதிரே இந்த வையத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. உயிர்கள் வளரவும்,பல்கிப்பெருகவும் உதவும் சூரிய பகவானை வணங்க ஏற்படுத்தப்பட்ட  புண்ணிய நாளே ரதசப்தமி. இது சூரிய பகவானுக்கு உரிய மாதமாக போற்றப்படும் தை மாத,அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது.

ரதசப்தமி அன்று தான், கருடாழ்வாரின் அண்ணனான அருணன் சாரதியாக இருக்க,ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன நம் புராணங்கள். சூரிய ஜெயந்தியான இன்றுவிஷ்ணுவும் சூர்ய நாராயணனாக வணங்கப்படுகிறார்.

ரதசப்தமியின் சிறப்பு

தை அமாவாசையில் இருந்து வரும் ஏழாம் நாள் சப்தமி எனப்படுகிறது. சூரியன் தன் தேர்க்காலை வடக்கு  நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை தான்  ரதசப்தமி என்று குறிப்பிடப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குவதையே இது குறிக்கிறது. சூரியனின் தேரில் உள்ள  12 சக்கரங்கள் 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும். வசந்தத்தையும் கோடையையும் வரவேற்கும் விதமாகவும் ரதசப்தமியை  கொண்டாடுகிறோம்.

ரதசப்தமியை அனுசரிக்கும்முறை

ரத சப்தமியன்று காலையில்,சூரிய உதய நாழிகையில், குளிக்கும்போது சூரியனுக்கு உகந்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு அதன்மீது அட்சதை,எள் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண் என்றால்  அதனுடன் விபூதியும், பெண் என்றால் அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இதனை தலைமீது வைத்து ஸ்நானம் செய்வதால்,சூரியனின் கதிர்கள் எருக்கன் இலை வழியாக நம் உடலால் ஈர்க்கப்பட்டு, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. தந்தை இல்லாதவரும் கணவனை இழந்தோரும் அரிசியும் எள்ளும் தலை மேல் வைத்து குளிக்க வேண்டும்.

இதற்குப் பின் வீட்டில் ஒரு சுத்தமான இடத்தில் செம்மண் கொண்டு மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைந்து  வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். சூரியனைப் போற்றி  சூர்ய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.

 ரதசப்தமி ஸ்நான மந்த்ரம்

 ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து  ஸப்தமீ

 நெளமி ஸப்தமி ! தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் 

 ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய !

ரதசப்தமியும் புராணமும்

தான் விரும்பியபடி, மரணத்தை பிராப்திக்கும் வரம் பெற்றிருந்தாலும், பீஷ்மரால் மரணத்தை சித்திக்க முடியவில்லை. இதன் காரணம் அறியாமல், கலங்கிய பீஷ்மருக்கு வேத வியாசர் மூலம் பதில் கிடைத்தது.


துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன்  துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த போதிலும் அதை தடுக்கவோ, நிறுத்தவோ இல்லாமல் கண்டும் காணாமல் இருந்த பாவத்தின் விளைவே,இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவித்தார்.இதற்கு பிராயச்சித்தம் கேட்ட பீஷ்மருக்கு,உடனே வேதவியாசர் தன்னிடம் எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ''பீஷ்மா, இந்த எருக்கன்  இலைகள் சூரியனுக்கு உகந்தது. சூரியனின் முழுச் சக்தியும் இதில்  உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்'' என்றவர்,  அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன  அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார் என்கிறது பாரதம்.

ரதசப்தமி அன்று நித்ய பிரம்மச்சாரியான பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு. ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி, பீஷ்மாஷ்டமி என்பர். அன்று முடிந்தவர்கள், புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும்,நமக்கு வாழ்வளித்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும்  செய்தால், சுகமான வாழ்வோடு, ஏழேழு ஜென்மத்தில் செய்த பாபங்கள் நீங்கி புனிதமடையலாம் என்கிறது சாஸ்திரம்.

ரதசப்தமி அன்று திருப்பதியில் நடக்கும் அர்த்த பிரம்மோத்சவத்தில், மலையப்பசுவாமி, ஒரே நேரத்தில், ஏழுவாகனங்களில், காலை பொழுதில் பவனி வரும் காட்சியைக் காண செய்த பாவங்கள் பகலவனைக் கண்ட பணியை மறைந்து விடாதா?

சூரிய சந்திரனை வணங்குவோம்! வாழ்வாங்கு வாழ்வோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP