Logo

நடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து காட்சி தருகிறது காவிரி.
 | 

நடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து காட்சி தருகிறது காவிரி. இந்த ஆடிப்பெருக்கு நீர் நிறை ஆடிப்பெருக்கு . காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,ஆடி மாதம் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இது பெண்கள் திருவிழாவாக அறியப்பட்டாலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய் தான் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும் இடத்தில் தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கும்  மக்கள், தங்கள் வாழ்வில் வளமையை கொண்டு வரும் தாய்க்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு.

காவிரி ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு திருவிழா தினத்தில் பெண்கள்  காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு ஆற்றங்கரைக்கு செல்வார்கள். இளம் பெண்கள், சமீபத்தில் திருமணமாகியிருக்கும் பெண்கள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லா வயதுப் பெண்களும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொள்வார்கள். ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று கலந்த சாதம் தயார் செய்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக ஆற்றுக்குக் கிளம்புவார்கள்.  

நடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா

பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு,ஆற்றை அடைந்ததும் படிதுறையில், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து,அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்துவர். பின் வாழை இலை விரித்து வைத்து அதில், வெற்றிலை வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள்,  குங்குமம்,  தாலிச்சரடு,  காதோலை,  கருகமணி,  வளையல்,  பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், ரவிக்கை துணி ஆகியவற்றை வைத்து,தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். புது மண தம்பதியரும் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்தப் பின் புதிய தாலிக்கயிறு மாற்றி கொண்டு திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள்.

நடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா

வழிபாடு முடிந்ததும், வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கியப் பின்,கொண்டு சென்ற கலப்பு சாதத்தை குடும்பமாக எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.

வீட்டிலும் கொண்டாடலாம் ஆடிப் பெருக்கு

 காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியுமா? நகரவாசிகளால் கொண்டாட முடியாதா என்று வருத்தப்பட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் மஞ்சள் கலந்த செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும்.நைவேத்தியமாக  சர்க்கரைப் பொங்கல் செய்து படைக்க வேண்டும்.  

விவசாயத்தை செழித்தோங்க வைத்து தமிழக மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி. மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆற்றுப் படுகை உற்சாகம் நிஜமாகவே பெரும் உற்சவம் தான்.

எங்கள் வாழ்வை நிறைத்தாய் காவிரி :  நீ நீடுழி வாழ்க 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP