பால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை

பழனி மலை செல்லும் பாதை நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளுடன் பாத யாத்திரை செல்லும் காட்சி பார்க்கும் கண்களுக்கு பக்தி பரவசம்.
 | 

பால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி -  காவடி மகிமை


பழனி மலை செல்லும் பாதை  நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளுடன் பாத யாத்திரை செல்லும் காட்சி  பார்க்கும் கண்களுக்கு பக்தி பரவசம்.பக்தர்கள் முழங்கும் அரோகரா முழக்கம் கேட்கும் காதுகளுக்கு தெய்வீக அனுபவம். 

காவடி மகிமை

சேவற்கொடியோனை சேவிக்க செல்லும் பக்தர்களின் தோளில் சுமந்து செல்லும் காவடியின் பொருள் இதோ : ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். உன்னை நம்பி மனமுருகி பிரார்த்தனை செய்து காவடியை தோளில் சுமந்து வருகிறோம். எங்கள் சுமைகளை உன் பாதங்களில் இறக்குகிறோம். எங்களை காப்பாற்று முருகா என பக்தர்கள் அரோகரா முழக்கங்கள் எழுப்பிய படி முருகனின் திருத்தலங்களை நாடி வருகிறார்கள்.

ஆடிக் கிருத்திகைத் திருவிழாவில் காவடி  எடுத்தலுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த காவடி எடுக்கும் பழக்கம் உருவானதன் பின்னணியில் புராண சம்பவம் ஒன்று இருக்கிறது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள்  காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக அமைந்தன.

முன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.

முருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா! அரோகரா! என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான். 

மீண்டும் மலைகளை  எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆசீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். ஆதி காலத்தில் பழனி மலையில் மட்டுமே காவடி எடுக்கும் பழக்கம் இருந்தது.பின்னாளில் முருகனின் திருத்தலங்களுக்கும் அறுபடை வீடுகளுக்கும் காவடி வேண்டுதல் பரவியது.

முருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்றார் அகத்திய மாமுனி.ஆடிக்கிருத்திகை தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழா நாட்களிலும் , பக்தர்கள்  பக்தி முழக்கத்துடன் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தங்கள் நேர்த்திக்கடனை  செலுத்துகின்றனர். 

ஓம் முருகா ! பழனி ஆண்டவருக்கு அரோகரா

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP