”கூனி இராமனுக்கு நன்மைதான் செய்திருக்கிறாள்” என்கிறார் கம்பர்?

இறைவனே வஞ்சத்திலும், பொறாமையிலும் சிக்கி துன்பங்களை அனுபவித்த போது சாதாரண மனிதப்பிறவியான நாமும் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க ஸ்ரீஇராமனின் பாதங்களைப் பற்றியிருப்போம்.
 | 

”கூனி இராமனுக்கு நன்மைதான் செய்திருக்கிறாள்” என்கிறார் கம்பர்?

உலகத்தில் உயிரினங்கள் இருக்கும் வரை  அன்பு, பொறுமை, இரக்கம், ஈகை குணங்கள் எப்படி நீக்கமற நிறைந்திருக்குமோ அதேபோன்று மறுபுறம் வஞ்சம், குரோதம், வன்மம் அனைத்தும் சரிபாதியாக இருக்கும். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்’ என்னும் இருவரி குறள் அழகாய்  வாழ்க்கையைக் கடக்க கற்றுக்கொடுக்கிறது.... எனக்குத் தீமை செய்த அவனை சும்மாவிட மாட்டேன் என்று  கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதைவிட  கஷ்ட காலங்களை இறைவன் அடியில் சமர்ப்பித்துவிடுங்கள்.  ஸ்ரீமந் நாராயணனே  தனது இராம அவதாரத்தில் மனிதன் படும் அத்தனை  சங்கடங்களையும் பொறுமையாக கடந்தார்.  அதை விளக்கும் சிறு நிகழ்வு இது..
 

ஸ்ரீ ராமனுக்கு பட்டாபிஷேகமாம்... ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.  மக்கள் அனைவரும் அத்தருணத்துக்காக காத்திருந்தவர்கள் போல் மகிழ்ச்சியில் திளைத் திருந்தாகள். முன் இரவு  தசரதன் இராமனை அழைத்து  பட்டாபிஷேகத்தின் முக்கியத்துவம், கடமைகள், உபவாசங்கள் போன்றவற்றை எடுத்துக் கூறுகிறார். ”துர்சகுணங்கள் நிறைந்த கெட்ட கனவை கண்டேன் இராமா. என் உயிர் என் உடலை விட்டு நீங்குவதற்குள்  உனக்கு பட்டாபிஷேகம் செய்தால் என் கடமை முடிந்துவிடும்” என்றார்.. ”கவலைப்படாதீர்கள் தந்தையே.. நடந்தவை யெல்லாம் நன்மைக்கே... நடக்கவிருப்பவையும் நன்மைக்கே” என்று  பணிவாக கூறினார்.

அந்தப்புரத்தில்  இராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதைக் கேள்விபட்ட கைகேயியும் மகிழ்ச்சியில் திளைத்தாள். பரதனை மகனாக பெற்றிருந்தாலும் ஸ்ரீ இராமன் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தவளாயிற்றே.. பணிப்பெண்ணான கூனி வஞ்சம், பொறாமை குணத்துடன் கைகேயியை வணங்கி “இராமனுக்கு நாளை பட்டாபிஷேகமாம்.. அரண்மனை முழுவதும்  திருவிழா கோலம் பூண்டிருக்கிறது  அரசியே.. மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.. ஆனால்” என்று இழுத்தாள்... ”ஆனால் என்ன கூனி நானுமே மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறேன். என் மகன் ஆளப்போகும் நாட்களை  காண மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்” என்றபடி கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி கூனிக்கு பரிசளித்தாள்..

”நீங்கள்  கொடையில் வள்ளலாக இருக்கிறீர்கள். ஆனால் இராமன் ஆளும் போதும் உங்களுக்கு இத்தகைய செல்வாக்கு இருக்குமா.. உங்கள் பரதன் நிலை என்ன ஆகும்.. அரசியான உங்களுக்கு முக்கியத்துவம் குறையவும் நேரலாம்...” என்று அக்கறையுடன் சொல்வது போல் கைகேயியின் முகத்தைப் பார்த்தாள். கைகேயி யோசித்த போது மேலும் மேலும் உருவேற்றினாள். ”ஆனால் நடைபெறுவதை எப்படித் தடுத்து நிறுத்துவது?” என்று  கேட்டாள் கைகேயி.. 

”தசரத மகாராஜா உங்களுக்கு வாக்களித்திருக்கிறாரே. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று  அதனால் பரதன் நாட்டை ஆள வேண்டும் என்றும் இராமன் 14  வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்” என்று கேளுங்கள்..  இப்படிதான் கூனி மனதில் இருக்கும் அத்தனை வஞ்சத்தையும் கொட்டி கைகேயியின் மனதை மாற்றிவிட்டாள்... இராமனின் பட்டாபிஷேகத்தை தடை செய்த கூனி இராமனுக்கு நன்மையே செய்திருக்கிறாள்.  ஸ்ரீ இராமனின்  புகழ் உலகெங்கும்  பரவ கூனியின் கடுஞ்செயலே காரணம் என்கிறார் கம்பர்..

இறைவனே  வஞ்சத்திலும், பொறாமையிலும் சிக்கி துன்பங்களை அனுபவித்த போது சாதாரண மனிதப்பிறவியான நாமும் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க ஸ்ரீஇராமனின் பாதங்களைப் பற்றியிருப்போம்.   

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP