மன பயம் போக்கும் துர்க்கா தேவி உபாஸனை

துர்க்கையின் நாமத்தை ஜெபித்து இந்த உலக மாயையை ஜெயிப்போம்.
 | 

மன பயம் போக்கும் துர்க்கா தேவி உபாஸனை

துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்

துர்க்கைக்கு உகந்த அஷ்டமி தினத்தில் அன்னைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்து,சிவப்பு வஸ்திரம் அணிவிக்கலாம்.
துர்க்கை அன்னைக்கு நல்லெண்ணை கொண்டு தீபம் ஏற்றி, சக்தி வாய்ந்த சண்டிகைதேவி சகஸ்ரநாமத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் 700 ஸ்லோகங்கள்  கொண்ட துர்கா சப்தசதி படிப்பதால், நல்ல மனநிலையை அடைவதுடன், பிறவி எடுத்ததினால் வந்த கஷ்டங்கள், துன்பங்கள், துக்கங்கள் அனைத்தையும் போக்கிடுவாள் துர்காதேவி. செய்யாத தவறுக்கு கோர்ட்டு விவகாரங்களால் மன அமைதியின்றி இருப்பவர்கள், வழக்கில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்கா பரமேச்வரியை சரண் புகுந்தால், வெற்றி நிச்சயம். 

பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி என்பதால், எந்த விஷயமாக இருந்தாலும் நினைத்தது நடக்க துர்க்கையின் திருவடியை தொழுதால் போதும்.

துர்க்கையை  உபாஸிப்பவர்களுக்கு  மனத்தெளிவும், பயமின்மையும் ஏற்படும். வாழ்வில் மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை என்பது கண்கூடு.

சிம்ம வாகனத்தில், மயில்தோகையை கொடியாகக் கொண்டு அமர்ந்திருக்கும் ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன், வாழும் போது சொர்க்க சுகத்தை அனுபவிப்பதுடன், வாழ்நாள் முடிவுக்குப் பின்னும்  நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான். துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் நெருங்குவதில்லை.

தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் சதா சர்வ காலமும் தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

மந்திர சாஸ்திரம் துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி,  ரோஹிணி, காளிகா, சண்டிகை,  சாம்பவி, துர்கா, சுபத்ரா என ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. 

சுவாஸினி பூஜையிலும் சைலபுத்ரி, ப்ரம்ஹசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, மகாகௌரி, காத்யாயனி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர் என்கிறது சாஸ்திரம். 

துர்க்கையின் நாமத்தை ஜெபித்து இந்த உலக மாயையை ஜெயிப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP