Logo

வரலஷ்மி நோன்பை எல்லோரும் கடைப்பிடிக்கலாம்...

வாழையிலையின் ஓரத்தில் மஞ்சள் பிள்ளையாரை அவருக்கே உரிய அருகம்புல்லில் வைத்து அதன் பிறகு குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு வெள்ளி, பித்தளை அல் லது செம்பு கலசத்தை அலங்கரிக்க வேண்டும். வெள்ளி அம்பிகைக்கு பிடித்த உலோகம் என்றாலும் ஆகம் விதிப்படி வீட் டில் நல்ல ஆற்றலை அதிகரிக்க...
 | 

வரலஷ்மி நோன்பை  எல்லோரும் கடைப்பிடிக்கலாம்...

நாளை வரலஷ்மி நோன்பு. புதிதாக திருமணமான பெண்கள், இந்த வருடம் முதல் நோன்பை எடுக்க விரும்பும் பெண்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாமா?

பூஜைக்கு முன் தினம், அதாவது இன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையையும் சுத்தம் செய்யவும். வரலஷ்மி நோன்பு என்றாலே அனைவரும் அம்மனை கலசத்தில் வைத்து வழிபடுவது பொதுவானது. அதனால் கலசம் வைக்கும் இடங்களைச் சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு, அகல் விளக்கை ஏற்றி, அம்மனை அழைக்க வேண்டும்.

ஒரு சிறிய மண்டபம் அமைத்து, அலங்கரித்து மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்டி, அதில் மஹாலஷ்மியின் முகத்தை வைக்க வேண்டும். வெள்ளியால் உருவாக்கப்பட்ட மஹால்ஷ்மியின் சிறு உருவ சிலையையும் வைக்கலாம். இயலாதவர்கள் மஹாலஷ்மியின் படத்தை வைக்க வேண்டும்.

முன்பெல்லாம் வெள்ளி, பித்தளை, செம்பு அல்லது சிறிய குடங்களில் கலசம் வைத்து, கலசத்தின் வெளிப்புறத்தில்  மஞ்சள் அல்லது சந்தனம் பூசி  வெள்ளியில் கண் மலர்கள், மூக்கு, வாய் என்று தனித்தனியாக கிடைக்கும் அவயங்களை சந்தனத்தில் பொருத்துவார்கள். இப்போது அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளியில் அம்மன் முகம் அப்படியே கிடைத்து விடுகிறது.

வழிபாட்டின் சிறிய மனைப்பலகையின் மீது கோலமிட்டு, அதன் மீது தலைவாழை இலையை போடவும். வாழையிலையின் மையத்தில் நெல் அல்லது பச்சரியைப் பரப்பி வைக்கவும். வாழையிலையின் ஓரத்தில் மஞ்சள் பிள்ளையாரை அவருக்கே உரிய அருகம்புல்லில் வைத்து, அதன் பிறகு குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு வெள்ளி, பித்தளை அல்லது செம்பு கலசத்தை அலங்கரிக்க வேண்டும்.

வெள்ளி, அம்பிகைக்கு பிடித்த உலோகம் என்றாலும், ஆகம விதிப்படி வீட்டில் நல்ல ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி செம்புக்கு உண்டு என்பதால் செம்பு கலசம் மிகவும் நல்லது.

கலசத்தினுள் பச்சரிசி, தங்கம் , வெள்ளி அல்லது ரூபாய்  நாணயம் ஒன்றை இட்டு, மஞ்சள் கிழங்கு , குங்குமம் இட்டு  மாவிலையை கலசத்தில் செருகி, மஞ்சள் தட விய தேங்காயை கலசத்தின் மீது வைக்க வேண்டும். கலசத்தில் புண்ணிய தீர்த்தம் ஊற்றி(நீருடன் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய்)  சில்லறை நாணயமும் இடலாம்.

எலுமிச்சை நிற பாவாடையை கலசத்தில் கட்டி லஷ்மியின் முகத்தை கலசத்தின் வாய் அருகே வைத்து பின்புற மாக கட்டி விட வேண்டும். இப்போது, அம்மன் முகம் அழகாக ஜொலிக்கும். அம்மனுக்கு அலங்காரம் செய்த கையோடு, மஞ்சளை மாங்கல்யமாக்கி மஞ்சள் நிற கயிறை கழுத்தில் கட்ட வேண்டும். அம்மனுக்கு பிடித்த தாமரை மலர்களாலும், நறுமணமிக்க மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும்.

நைவேத்யத்துக்கு பழ வகைகள், பொங்கல், வடை, கொழுக்கட்டை, பச்சரிசி மாவில் சுட்ட இட்லி,  பால், தேன், கற்கண்டு போன்றவை உகந்தது. இலையில் நைவேத்யங்களுடன் மஞ்சள் கயிறால் செய்யப்பட்ட நோன்பு கயிறையும் வைக்க வேண்டும்.

இந்த நெய்வேத்தியதுடன் புளியோதரை சாதமும் வைக்க வேண்டும். லக்ஷ்மியின் சகோதரியான அலக்ஷ்மியையும் நாம் மதித்து வழிபட்டால், லட்சுமி தேவி இன்னும் அகமகிழ்வாள். எனவேதான் லட்சுமிக்கு பிடித்த புளியோதரை படைக்க வேண்டும். இத்துடன் ஏதேனும் ஒரு சுண்டலையும் நெய்வேத்தியம் செய்யலாம்.

அஷ்டலஷ்மிகளுடன், வரலஷ்மியையும் சேர்த்து ஒன்பது பேர் என்பதால், மஞ்சள் கயிறு ஒன்பது இழைகளாக முடிச்சு போடப்பட்டு, நோன்பு கயிறாக வைக்க வேண்டும். அவரவர்கள் பழக்கத்துக்கேற்ப காலை இராகு காலத்துக்கு முன்பும் அல்லது மாலை வேளையிலும் பூஜைகள் செய்ய வேண்டும். லஷ்மிக்கு நெய் விளக்கேற்றுவது நல்லது.

அரிசியுடன் மஞ்சளைக் கலந்து, உதிரி பூக்கள் சேர்த்து, அட்சதையாக்கி கற்பூர ஆரத்தியுடன் வாசலில் இருந்து  லஷ்மியை அழைத்தப்படி வீட்டுக்குள் பூஜையறைக்குள் வந்து முடிக்க வேண்டும். அப்போது மங்களகரமான ஸ்தோத்திரங்கள் உச்சரிக்க வேண்டும். பூஜையின் போது அஷ்டலஷ்மி ஸ்தோத்ரம், கனகதாரா ஸ்தோத்ரம், மகாலஷ்மி ஸ்தோத்ரம் பாடியபடி அம்மனை வணங்கி சுமங்கலிகளை அழைத்து மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், ரவிக்கை, வெற்றிலைப்பாக்கு வாழைப்பழம் வைத்து தாம்புலம் கொடுக்கவும்.

பூஜையின் நிறைவில் மூத்த சுமங்கலிகளிடம் நோன்பு கயிறை கொடுத்து அல்லது கணவனின் காலில் விழுந்து வணங்கி கயிறை கட்டிக்கொண்டு நோன்பை முடிக்கலாம்.  அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்வழிபாடுகளையும் உரிய முறையில் செய்தால் தான், வரலஷ்மி அருள்புரிவாள் என்பதில்லை. உள்ளத்தூய்மையுடன் மனம் முழுக்க வரலஷ்மியை நினைத்து எளிய முறையில் செய்யும் கலச வழிபாடும் வரலஷ்மியின் அருளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.

மாங்கல்ய பலனும், மன நிம்மதியும், அளவற்ற செல்வமும் கிட்டிடும் வரலஷ்மி நோன்பு.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP