பகவத் கீதையை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியுமா?

இந்துமதத்தில் இருக்கும் ஆன்மிக நூல்கள் உயர்ந்த உன்னதமான கருத்துக்களைக் கொண்டவை அவ்வளவு எளிதில் அவற்றை ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவற்றை படிப்பதன் மூலம் வாழ்வை நேர்மையான முறையில் கடக்கலாம்.
 | 

பகவத் கீதையை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியுமா?

ஆன்மிகம். படிக்க படிக்க..கேட்க..கேட்க..அற்புதமானது. ஆனால் அதை முழுமையாக ஆத்மார்த்தமாக உணர கண்டிப்பாக ஆயுள் போதாது. எந்நேரமும் இறைநாமம் உச்சரிப்பவர்களாலேயே அந்த பேரின்பத்தை எட்டுவது கடினம் என்னும்போது சாதாரண பிறவிகளுக்கு அது எளிதில் சாத்தியமாகிவிடாது.

ஆன்மிக பெரியவர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டில் இருந்த பேரனும் அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதைப் பார்த்து அப்படியே செய்வான். அவர் தினமும் பகவத் கீதை படிப்பதை பார்த்துக்கொண்டே இருப்பான். அவனும் அன்றிலிருந்து படிக்க ஆரம்பித்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அதைப் படிக்காமலும் இருக்கமுடியவில்லை. இவ்வளவு சிரமப்பட்டு படிக்கிறோம். எதுவும் புரியவில்லையே என்று நினைத்தவன் அந்த பெரியவரிடமே சென்று தாத்தா எனக்கு எதுவும் புரியவில்லை. புரியாத ஒன்றை கஷ்டப் பட்டு படிப்பானேன் என்றான்.

உன் கேள்விக்கு நான் பதில் சொல்வதற்கு முன்பு எனக்கு இந்த வேலையை செய்து கொடு என்று அழுக்கு நிறைந்த மூங்கில் கூடையை அவனிடம் கொடுத்து ஆற்றுக்குள் சென்று இது முழுவதும் நீர் நிரப்பி வா என்றார். சிறுவனும் கூடையை வாங்கிக்கொண்டு துள்ளி குதித்து சென்றான். மூங்கில் கூடையில் எப்படி நீர் தங்கும். அதை அறியாமல் நீரை அள்ளிவந்த சிறுவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் ஒழுகிவிட்டது. 

என்ன இது இப்படி ஆகிவிட்டதே என்று சோகமாக பெரியவரிடம் கேட்டான். நீ வேகமாக வந்திருந்தால் தண்ணீர் ஒழுகியிருக்காதே என்றார். சரி என்றவன் இம்முறை ஓடிச்சென்று கூடை முழுக்க நீரை நிரப்பி வந்தான். இம்முறையும் நீர் வடிந்துவிடவே அவனுக்கு எரிச்சல் ஆகிவிட்டது. போங்கள் தாத்தா இனியும் போய் நீர் எடுக்கமாட்டேன் என்றான்.

உடனே பெரியவர் அந்த அழுக்குநிறைந்த கூடையைக் காட்டி இப்போது பார்த்தாயா கூடையை இரண்டு முறை ஆற்றுக்குள் போட்டதும் அழுக்கு நீங்கி பளிச்சென்று ஆகிவிட்டது. இப்படித்தான் நீ பகவத் கீதையை அர்த்தம் புரியாமல் அன்றாடம் படித்தாலும் உன் மனதில் நல்லெண்ணங்கள் அதிகரிக்கும். மனம் தீய்மையான விஷயங்களை நாடிச்செல்லாது. தர்மவழியில் நடந்து சிறந்த மனிதனாக வளையவர கீதை உனக்கு வழித்துணையாக இருக்கும் என்றார். சிறுவனுக்கு சற்றே புரிந்தது.

இந்துமதத்தில் இருக்கும் ஆன்மிக நூல்கள் உயர்ந்த உன்னதமான கருத்துக்களைக் கொண்டவை அவ்வளவு எளிதில் அவற்றை ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவற்றை படிப்பதன் மூலம் வாழ்வை நேர்மையான முறையில் கடக்கலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP