தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 27

தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 27
 | 

தினம் ஒரு திருப்பாவை - திருப்பள்ளிஎழுச்சி- 27

திருப்பாவை - 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

நெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.


திருப்பள்ளி எழுச்சி - 07

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

இதுஅவன் திருஉரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர் பொழில்திரு உத்தரகோச

மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

விளக்கம்: பழம் பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணிகொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP