இங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்

வேலூர் மாவட்டத்திலலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் ,10 கிலோமீட்டர் தொலைவில் இரத்தினகிரி மலையில் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித வசதியும் இன்றி காட்டுப்பகுதி போல் காட்சி அளித்த இடத்தில் அழகன் முருகன் வீற்றிருந்தார்.
 | 

இங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்

முருகன் என்றாலே அழகன் என்று பொருள். இயற்கை தன்னை அலங்கரித்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் அழகன் முருகனைக் காணலாம். ஆம் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனுக்கு கொண்டாட்டம் தான்.சிவந்த மேனி கொண்ட முருகன் குன்றில் குடிகொண்டு அருள்பாலிக்கிறான் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குன்றின் மீது குமரன் இருக்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. நமது உடலில் உச்சந்தலையில் உள்ள  சஹஸ்ர ஹாரத்தினை குறிக்கும் முகமாகவே முருகன் மலை உச்சியில் வசிக்கிறான் என்றும் கூறுவர். குமரன் குன்றில் மீது வசிக்க வந்த இடங்களெல்லாம் ஆலயங்களாக மாறியது சுவையான கதை. அறுபடை வீடுகளைத் தாண்டி அநேக இடங்களில் குமரன் ஆட்சி செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  

வேலூர் மாவட்டத்திலலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் ,10 கிலோமீட்டர் தொலைவில் இரத்தினகிரி மலையில் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித வசதியும் இன்றி காட்டுப்பகுதி போல் காட்சி அளித்த இடத்தில் அழகன் முருகன் வீற்றிருந்தார். அம்மலையைச் சுற்றி உள்ள இடத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து வளம் பெற செய்ய நினைத்த முருகனே, ஒருவரை ஆட்கொண்டு அவர் மூலமாக இரத்தினகிரியை ரத்தினமாக ஜொலிக்க செய்தார். வனாந்திரமாய் இருந்த இடத்தில் உள்ள முருகனை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்திருந்தார். அர்ச்சகர் முருகனுக்கு   தீபாராதனையும், பத்தியும் காட்டாமல் விபூதியை மட்டும் அளித்தார். விளக்கின் ஒளியும் மங்கலாக தெரிந்தது. குன்றில் விரும்பி குடியேறிய முருகனுக்கு தீபாராதனை காண்பிக்க கூட கற்பூரம் இல்லையா.. என்று வருந்திய பக்தர்  எம்மைக் காக்கும் முருகனே உனக்கு இத்தகைய நிலையில் இருக்கும் இந்தக் கோவில் தேவைதானா என்று கண்களை மூடியபடி வருந்தியிருக்கிறார்.  அப்போது அவர் மனக்கண்ணில் முருகன் பிரசன்னமாக தோன்றி மறைந்தார். முருகனை தரிசித்த பக்தர் மயக்கமானார். முருகன் என்னை ஆட்கொண்டு விட்டான். இனி கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனையே எனக்கில்லை என்று அதுவரை உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்த பக்தர் மகானாகிவிட்டார். அதன் பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை. அவரே தவத்திரு மெளனகுரு சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் இந்த குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. அருணகிரி நாதர் இம்முருகனைப் பற்றி திருப்புகழில் ஒப்பில்லாத மாமணி வித்தகர் என்று பாடியிருக்கிறார். 

இங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்

மலையிலிருந்து கோயிலுக்கு செல்ல அகன்ற படி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் முகப்பு வாயிலில் வரசித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. இவரை வழிபட்டு அனுமதி பெற்ற பிறகே மலையில் உள்ள பாலமுருகனை சந்திக்க வேண்டும். 177 படிகளில் மலைக்கோயிலை அடைந்துவிடலாம் என்றாலும் இடையில் பக்தர்கள் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் உண்டு. மேலே ஏறிச்செல்லும் போதே ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தைத் தரிசிக்கலாம். உற்சவர் முருகன் சன்னிதி கல்தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் உண்டு. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் துர்க்கைக்கு விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தில் வாராஹிக்கும் தனி சன்னிதி உண்டு. வாராஹிக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது.

மூலவர் பாலமுருகன் நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி தரிசனம்  தருகிறார். கருவறைக்கு முன் மிகப்பெரிய வேல் ஒன்று உண்டு. முருகர், பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியின் போது சூரசம்ஹார நிகழ்வு நடப்பதில்லை. இங்குள்ள தீர்த்தம் ஆறுமுக தெப்பம் என்று அழைக்கப்படுகிறது. அறுகோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள திருக்குளம் காணவே அழகு. இங்குள்ள முருகனுக்கு பூஜை செய்யும் போது முருகனின் எண்ணான ஆறு என்னும் எண்ணிக்கையில் வருமாறு மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 ஆக இருப்பது சிறப்பு. சிவனிலிருந்து தோன்றிய முருகன் சிவாம்சம் நிறைந்தவர். எனவே இங்குள்ள பாலமுருகனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். விஷேஷ நாட்களில் முருகன் ரத்தினங்கள் நிறைந்த ஆடைகளால் காட்சிதருகிறார். முருகன் பாலவடிவில் இருப்பதால் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது பால் நிவேதனம் செய்கின்றனர்.

இத்தலத்தின் மற்றொரு விசேஷம் பக்தர்கள் தங்கள் குறைகளை கேள்வியாக எழுதி அருள்வாக்கு பெறுவது. இத்தலத்தில் உள்ள முருகனின் அடியவர், மெளனமாக கண்களில் தீட்சண்யத்துடன் அருள்வாக்கு வழங்கி பக்தர்களின் குறைகளைத் தீர்க்கிறார். எழுத்தால் இறைவன் வாக்கை இயம்பி வருகிறார். குறையோடு வரும் பக்தர்களின் கேள்விக்கு கனிவோடு பதில் எழுதி விபூதி மணக்க அள்ளித்தருகிறார். பக்தர்களும் முருகனடிமை சொன்னதை முருகனே சொன்னதாக ஏற்றுக்கொண்டு திரும்புகின்றனர். தொழில் சிறக்க, திருமணத்தடை நீங்க, ஆரோக்யம் நீடிக்க என்று சகலத்தையும் கேள்வியாக எழுதி அருள்வாக்கின் மூலம் பதில் பெற்று திருப்தியாக திரும்புகிறார்கள் பக்தர்கள். திருமணத்தடை உள்ள பக்தர்கள் இந்தக் கோவிலில் உள்ள வாராஹி அம்மனை வேண்டி வளர்பிறை பஞ்சமியில் வாழை இலையில் அரிசி, தேங்காய்,  வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி தடையை போக்கி கொள்கிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்கள் பாலமுருகனை சரணடைந்து அருள் பெறுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இரத்தினகிரி முருகனை வழிபடுங்கள். வேண்டுதல்கள் நிறைவேற பாலமுருகன் அருள்புரிவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP