முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது?

பித்ரு தோஷம் இருக்கும் வீட்டில் திருமணம் நடக்காது அல்லது மிக தாமதமாக நடக்கும். திருமணம் முடிந்த தம்பதியரிடையே அந்நியோன்யம் இருக்காது. தம்பதியருக்குள் அதிக கருத்து வேறுபாடுகளுடன் விவாகரத்து வரை செல்லும்
 | 

முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது?

தோஷங்களில் கொடுமையான தோஷம் பித்ரு தோஷம். கடவுளை நேரில் கண்டு வரம் பெற்றாலும் அதைத் தடுக்கும் சக்தி பித்ரு தோஷத்துக்கு உண்டு. பித்ருக்கள் என்பது நமது குடும்பத்தில் இறந்த முன்னோர்கள்.அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையவில்லையென்றால் பித்ருதோஷம் தாக்கும். இந்து மதத்தில் பித்ருக்கள் சூட்சுமமாக இருக்கும் பித்ரு லோகத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இவர்களை வாழும் போதும், குறிப்பாக நம்மை விட்டு நீங்கிய பிறகு இவர்களுக்காக செய்யப்படும் திதி, ஸ்ரார்த்தம் தவறாமல் செய்யவேண்டும். நமது இந்து சாஸ்திரமும், முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது. பகீரதன் கங்கையை பூமிக்கு அழைத்து வந்தது கூட தம் முன்னோர்களை சாந்தப்படுத்ததான். அதனால் தான் நம் முன்னோர்கள் நீத்தார் வழிபாடு  நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை விடாமல் செய்து நம்மை காப்பாற்றினார்கள்.
பித்ரு தோஷம் இருக்கும் வீட்டில் திருமணம் நடக்காது அல்லது மிக தாமதமாக நடக்கும். திருமணம் முடிந்த தம்பதியரிடையே அந்நியோன்யம் இருக்காது. தம்பதியருக்குள் அதிக கருத்து வேறுபாடுகளுடன் விவாகரத்து வரை செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு விபத்து, வேலையில்லா திண்டாட்டம், தொழில் வியாபாரங்களில் நஷ்டம், குடும்பத்தில் சண்டைகள், நிம்மதியில்லாமை இருப்பது எல்லாமே பித்ருதோஷத்துக்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

வாழும் போது நட்சத்திரம்.. வாழ்ந்த பிறகு திதி என்பததைத் தான் நம்முடைய இந்து மதம் வலியுறுத்துகிறது. ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள். அந்த ஒரு நாளில் அவர்கள் இறந்து போன திதி அல்லது அமாவாசை அன்று தான், திருப்தியைத் தேடி நம்மிடம் வருகிறார்கள். அதனால் தான் அந்த நாட்களில் நாம் திவசம் கொடுத்து அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்று சொல்வது. அவர்கள் இறந்த ஒருவருடத்துக்குள் அவர்களது இரத்த சம்பந்தத்தால் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது.  இறந்து போனதிலிருந்து 10 வது நாள், 16 வது நாள் காரியம் செய்யப்படும் நாள், 27 வது நாள், மாதம் வரும் இறந்த திதி -12, ஒரு வருடம் முடிந்த நிலையில் வரும் திதி என இந்த 16 திவசங்களையும் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்திவிட்டால் ஜன்மசாபல்யம் அடையலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இறந்தவரின் ஒருவருடம் பூர்த்தியடைவதற்குள் 16 முறை திவசம் செய்வது நல்லது.

வருடம் முடிந்து திதி அன்று செய்யப்படும் திவசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்துக்குள் இறந்தவரை நினைத்து திதியை முடித்துவிட வேண்டும். நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள்  ஏற்றுக்கொள்ளும் நேரம் மிக மிக புனிதமானது என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். அன்று பிராமணரை அழைத்து விரிவாக செய்ய வேண்டும். முதலில் ஹோமம் வளர்த்து தேவர்களைத் திருப்திபடுத்த வேண்டும். பிறகு தர்ப்பைப் புல்லில் இறந்து போனவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்கள் அனைவரையும் மானசீகமாக அழைத்து அவர்களது மேல் பிண்டம் வைத்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். உணவளித்த பிண்டத்தை பசுமாடுகளுக்கு கொடுத்து விட்டு, பிராமணருக்கு அரிசி, பலவித காய்கறிகளில் ஒவ்வொன்று என்று கொடுத்து ஆசி பெற்று, பிறகு இறந்தவருக்கு பிடித்த உணவை படையலிட்டு காக்கைக்கு வைத்து பிறகு சாப்பிட வேண்டும். இவையெல்லாம் பித்ருக்கள் இறந்த திதியன்று செய்தால் மட்டுமே அவர்களை சேரும்.

முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது?

முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது? அவர்களுக்கு உரிய திதியில் உணவும் தண்ணீரும் இல்லாமல் பசியால் வாடுவதோடு அவர்கள் தாகத்தில் நம்மை சபித்துவிடுவாரே என்று கேட்பவர்கள் அதற்குரிய பரிகாரம் செய்வது ஓரளவு தோஷத்தை நிவர்த்தி செய்யும். தொடர்ந்து நீங்கள் அந்த திதியில் திவசம் கொடுத்து வந்தால் நாளடைவில் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். அவர்களது ஆசியும் உங்களுக்கு கிட்டும்.

அமாவாசை நாட்களில் பசுமாடுகளுக்கு வெல்லம், எள்ளு, பச்சரிசி, அகத்திக்கீரை கலந்து கொடுக்கலாம். பொதுவாக திதிகொடுப்பது இறந்தவரின் இரத்த சம்பந்தமான உறவாகவும், அந்தப் பரம்பரையை விருத்தி செய்யும் ஆண்மகனாக மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இறந்தவருக்கு ஒரு பெண் மட்டுமே மகளாக இருந்தால் அவர்களும் முன்னோர்களின் ஆன்மாவைத் திருப்திபடுத்தலாம். செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் நெந்மேலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்துக்கு வந்து எல்லோருமே தர்ப்பணம் கொடுக்கலாம். இங்கு திதியை மறந்தவர்களுக்கும், திதி தெரியாதவர்களுக்காகவும் சிரார்த்த சம்ரட்சண பெருமாளே அவர்கள் சார்பில் முன் நின்று திதியை கொடுப்பதாக ஐதிகம். பித்ரு வேளை பூஜை என்று மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பெருமாள் ஆராதனம் இருந்து இந்த விரதத்தை ஏற்று கொடுப்பதால் இறந்தவர்களது ஆன்மா சாந்தியடைகிறது என்று நம்பப்படுகிறது. 

நல்லாயிருக்கணும் என்று வயிறு நிறைந்து மனம் குளிர்ந்து பெரியோர்கள் சொல்லும் ஆசியில் தான் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி திளைக்கிறது என்று நம்பும்போது, இறந்த பிறகு வயிறு வாடி பசியாலும், தாகத்தாலும் தவித்து வேறு வழியின்றி அவர்கள் அளிக்கும் சாபமும் நம்மை மகிழ்ச்சியாக வாழவிடாது துரத்தும் என்பதையும் நம்பிதான் ஆகவேண்டும். இனியாவது முன்னோரது இறந்த திதியை கணக்கில் வைத்து (தமிழ் மாதத்தில் வரும் வளர்பிறை திதியா, தேய்பிறை திதியா) கணக்கிட்டு தர்ப்பணம் செய்து, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். பித்ருக்களின் மனம் குளிர்ந்த ஆசியினால் மகத்துவமான வாழ்க்கை பெற்று மேன்மையாக வாழ்வீர்கள்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP