நம்பி இறங்கலாம் தொந்தி கணபதியை

புதிய ஆண்டில் புதிதாக தொடங்கப்படும் செயல்களை பிள்ளையாரின் காதில் ஓதுங்கள்.
 | 

நம்பி இறங்கலாம் தொந்தி கணபதியை

 பிடிச்சுவெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கியே .. அவ்வப்போது  ஆங்காங்கே கேட்கும் வசனம்தான். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் புரியும்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று பிரபஞ்சத்தையே அடக்கி ஆளும் சக்தியை சொல்கிறோம். அந்த சக்தியைப் பெறுவதற்கு  பிள்ளையின் உதவி தேவை. பார்வதி பரமேஸ்வரிக்கு பிள்ளை என்பதால் நம் அனைவருக்கும் பிள்ளை.அவருக்கான மரியாதையைச் சேர்த்து பிள்ளையார்  என்று அழைக்கிறோம். 

இன்றும் நாம் செய்யும் அனைத்து சுப காரியங்களிலும் பிள்ளையாரை வணங்காமல் அக்காரியத்தில் நமக்கு பிடிப்பு இருப்பதில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணலாகாமல் இருக்க  பிள்ளையாரைத்தான் அணுக வேண்டும். மளிகை பொருள்கள் எழுதும் சாதாரண வெள்ளைத்தாளில் கூட பிள்ளையார் சுழி போடாமல் சிலர் எழுதமாட்டார்கள்.  அந்தளவு நம் வாழ்க்கையில், நம் இன்பத்தில் இரண்டறக் கலந்து விட்டவர் பிள்ளையார்.  கணங்களின் அதிபதி, பூதகணங்களிற்கெல்லாம் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை போன்ற முகத்துடன் இருப்பதால் ஆனை முகன் என்றும், யானைக்கு மற்றொரு பெயரான கஜம் என்ற பெயரைக் கொண்டு கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். கடவுள்களில் மிகவும் எளிதானவர். கோயில்களும், கோபுரங்களும், விமானமும் இல்லையென்றாலும் அரச மரத்தடியில் கூட ஆனந்தமாய் அமர்ந்து விடுவதால் அனைவருக்கும் பிடித்த முழுமுதற் கடவுளாகிவிட்டார். 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 

எவ்வளவு எளிதான  பிள்ளையாருக்கு உரிய மந்திரம். குழந்தைகள் கூட விரும்பிசொல்லும் இந்த மந்திரத்தைச் சொல்லியபடி நெற்றியில் குட்டிக்கொண்டு ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றிப்பாதையில் இருந்து விலகியதில்லை. என்ன வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும்  உடனடியாக தருவதில் முதன்மையானவர்  நமது முத்துவிநாயகர். கடவுளை நேரில் காணமுடியாது உணரத்தான் முடியும் என்பதெல்லாம் இவரிடம் நடக்காது. நம்ம பக்கத்து வீட்டு ஆசாமி மாதிரியான சாமி இவர். கடவுள்களிடம் வேண்டுதல் இருக்கட்டும். அதை நிறைவேற்ற தூதுபோக ஒருவர் வேண்டாமா. அதைச் செவ்வனே சிறப்பாக செய்து வருவதால் பிள்ளையாரை நினைத்து செய்யும் காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.  20 வருஷம் முன்னாடி பரீட்சைய நல்லா எழுதலேன்னா கூட பசங்க கவலைப்படமாட்டாங்க. பிள்ளையாரை வணங்கலன்னாதான்  பரீட்சையில மார்க் வராதுங்கிற பயமே வரும். ஏன்னா படிச்ச கேள்வியை மட்டும் கொடுக்கிறதும்  எல்லாருக்கும் மார்க் போடறது பிள்ளையார்தாங்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவங்களுக்கு.  பூஜைக்கு மஞ்சப் பிள்ளையாரும், சுபவிசேஷங்களில் பிள்ளையார் சுழியுடன் தொடங்கப்படும் செயல்களும் இன்றும் பழமை  மாறாமல் ஜெயத்தைக் கொடுத்துவருகிறது. எந்த நற்காரியத்திலும் நம்பி இறங்கலாம் தொந்தி கணபதியை.

புதிய ஆண்டில் புதிதாக தொடங்கிய,தொடங்கப்போகும் செயல்களை பிள்ளையாரின் காதில் ஓதுங்கள். தகுந்த நேரத்தில்  தகுந்த இடத்தில் நமக்காக தூது போகும் முழுமுதற் கடவுள் அவர்தான். அவர் மட்டும்தான்.  முதன்மை கடவுள் பிள்ளையாரை ஆண்டின் தொடக்கத்தில் வணங்குங்கள். இந்த வருடம் முழுவதும் வெற்றியை உங்கள் வசமாக்குவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP