மெய்ப்பொருள் நாயனார் -2

சிவனின் மீதும் சிவனடியார் மீதும் அன்பு கொண்டு வீரத்தில் சிறந்து விளங்கிய மெய்ப்பொருள் நாயனாரை போரில் எதிர்க்க முடியாமல் சூதால் அவரை மாய்க்க நினைத்தான் முத்தநாதன்.
 | 

மெய்ப்பொருள் நாயனார் -2

சிவனின் மீதும் சிவனடியார் மீதும்  அன்பு கொண்டு வீரத்தில் சிறந்து விளங்கிய மெய்ப்பொருள் நாயனாரை போரில் எதிர்க்க முடியாமல் சூதால் அவரை மாய்க்க நினைத்தான் முத்தநாதன். மெய்ப்பொருள் நாயனார் சந்தேகம் கொள்ளாத வகையில் சிவனடியார் வேடம் பூண்டு ஓலைச்சுவடியில் கத்தியை மறைத்துக்கொண்டு அரசனை சந்தித்தான்.

அரசனைத் தனிமைப்படுத்திய பிறகு.. அடியார் வேடம் பூண்டிருந்த முத்தநாதன் அரசனை நோக்கி திருநீறு கொடுத்தான். அரசனும் மகிழ்ந்து என்னை வாழ்த்துங்கள் என்று அவன் கால் பணிய தக்க சமயம் பார்த்து காத்திருந்த முத்தநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரசன் மீது விசீனான். குருதி பாய கீழே விழுந்த அரசனின் கண்களில் அந்நிலையிலும் முத்தநாதன் சிவனடியாராகவே காட்சி தந்தான். அவன் மீது துளியும் வெறுப்போ, சினமோ கொள்ளவில்லை.

சத்தம் கேட்டு வந்த காவலாளி முத்தநாதனை தாக்க முயற்சித்த நிலையிலும் காவலாளியை தடுத்த மெய்ப்பொருள் நாயனார் அவனை நிறுத்தி சிவாயநம என்று சொல்லி சாய்ந்தார். அவரைத் தாங்கி பிடித்த காவலாளியிடம் இவ்வடியாருக்கு எவ்வித துன்பமும் நேராமல் அழைத்துக்கொண்டு போய் ஊர் எல்லையில் விட்டு விட்டு வா என்றார். உள்ளம் முழுக்க கோபமும், வீரமும் அவனை வெட்டியெறீய வேண்டும் என்ற கோபத்தில் இருந்த காவலாளிக்கு அந்நிலையிலும் அரசனின் அன்பையும், பக்தியையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்த காவலன் செய்வதறியாமல் கண்ணீர் சொரிந்தான். 

அரசனின்  வார்த்தைகளை மறுக்கமுடியாமல் அடியார்வேடத்தில் முத்த நாதனை அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லையை நோக்கி  புறப்பட்டான். இதற்கிடையில் மன்னருக்கு ஏற்பட்ட துன்பம்  காட்டுத்தீ போல் மக்களுக்கும் அரண்மனை வாசிகளுக்கும் அரசியாருக்கும் எட்டியது. தாங்கொணா துன்பத்துடன் அந்தப்புறத்தில் இருந்து ஓடி வந்தார் அரசியார். மன்னனை மடியில் வைத்து கதறினார். புலம்பினார். ஆற்றமாட்டாமல் அழுது வடிந்தார்.

கொடிய அரக்கன் முத்தநாதனின் செயலைக் கேள்வியுற்ற மக்கள் கொதித்தார்கள். அவன் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டார்கள். வழியில் எதிர்பட்ட காவலாளி மன்னர் அடியார் வேடத்தில் இருந்த முத்தநாதனை ஊர் எல்லையில் பாதுகாப்பாக விட்டுவர வேண்டி மெய்ப்பொருள் நாயனார் ஆணையிட்டதாக கூறினான்.

மக்கள் ஆத்திரத்தை அடக்கி தாங்கொணா முடியாத துயரத்தில் ஒன்றும் செய்ய இயலாமல் அரண்மனையை நோக்கி நடந்தார்கள். அரண்மனையில் ஒன்று கூடிய மக்களின் கூட்டம் மெய்ப்பொருள் நாயனாரை காண துடித்தது. அரசன் அடியாரை விட்டு வந்த காவலனுக்காக உயிர் நீக்காமல் காத்திருந்தார்.

முத்தநாதனை ஊர் எல்லைக்கு அப்பால் விட்டு விட்டு ஓடி வந்தான் காவலன்.அரண்மனையை எட்டிய கையோடு மெய்ப்பொருள் நாயனாரின் நிலையைக் காண வந்தான். அவனை அருகில் அழைத்த அரசர் அடியாராக வந்த முத்தநாதனின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டார். அடியாருக்கு துன்பம் நேராமல் காத்துவிட்டாயே என்று நன்றி கூறியபடி தன் உயிரை துறந்தார். அத்தருணம் அறையில் கிளம்பிய பேரொளியில் எம்பெருமான் சக்தியுடன் காட்சி தந்தார். அவரது திருவருளால் மெய்ப்பொருள் நாயனார் மீண்டும் இளமையுடன்  எழுந்தார். அரசியார் மனமகிழ்ந்து எம்பெருமானை நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். காவலாளி மகிழ்ச்சியில் குதித்தான். 

உயிர்நீத்த சமயத்திலும் அடியாரிடமும் திருநீறு தரித்தவரிடமும் நீங்கள் கொண்ட பக்தியால் அறநெறிதவறாமல் வாழ்ந்து மீண்டும் எம்மிடம் வந்து சேருவீர்கள் என்று அருளினார் எம்பெருமான். இம்மியளவும் எம்பெருமான் மீது கொண்ட பக்தியிலும், அடியார் மீது கொண்ட அன்பையும் குறையாமல் வாழ்ந்து தம்பதியராய் சிவபெருமான் பாதத்தில் சரணடைந்தார்கள்.

மெய்ப்பொருள் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP