எதிரிகளை தவிடு பொடியாக்கும் வீரபத்திர சுவாமி

வாழ்க்கையில் எந்த லக்ஷ்மி இருந்தாலும்,வீரலஷ்மி இல்லையென்றால் வாழ்வில் பலன் இல்லை என்பார்கள்.
 | 

எதிரிகளை தவிடு பொடியாக்கும் வீரபத்திர சுவாமி

வாழ்க்கையில் எந்த லக்ஷ்மி இருந்தாலும்,வீரல‌ஷ்மி இல்லையென்றால் வாழ்வில் பலன் இல்லை என்பார்கள்.எதிரிகளை உதிரியாக்கவும்,நம்மை தற்காத்துக் கொள்ளவும் வீரம் தேவை. அனைத்து கலைகளுக்கும் அதி தேவதைகள் இருப்பது போல்,வீரத்திற்கும் காளி,துர்க்கை,சப்தமாதர்கள் முதலான தெய்வங்கள் வீரத்திற்கான தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்.அவர்களுள் ஒருவர் தான் வீரபத்திரர்.

யார் இந்த வீரபத்திரர்

சம்கார மூர்த்தியான ஈசனின் அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களுள் ஒருவர் தான் வீரபத்திரர். மமதைக் கொண்ட தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப் பட்டவரே வீரபத்திர மூர்த்தி.  அன்னை பராசக்தியால் உண்டாக்கப் பட்ட பத்ரகாளி , அவருக்கு தேவியாகத்  திகழ்கிறாள் .
பொதுவாகவே வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அதிகமாக பார்க்க முடியாது. அபூர்வமாகவே சில இடங்களில் மட்டும் தான் காண முடியும்.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்கிறார்கள் பயன் அடைந்தவர்கள்.

இத்திருத்தலத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய அளவில் ஆலயம் அமைந்துள்ளது . கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி ,கேடயத்தையும் தாங்கியபடி,வலது கால் புறத்தில் தட்சன் நின்றிருக்க வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமையப் பெற்று சுமார் எட்டு அடி உயரத்தில், கம்பீரமாக காட்சியளிக்கிறார் வீரபத்திரசுவாமி. 

இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரரை மனமுருகி வழிபடுவோருக்கு காலை வேளையில் குழந்தைப் போன்ற பொலிவுடனும்,உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்துடனும்,மாலை வேளையில் வயோதிகத் தோற்றத்துடனும் காட்சியளிப்பதாக சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

தல புராணம்

தட்சனை ஈசனின் ஆணைக்கு பணிந்து சம்ஹரித்தப் பின்,வீரபத்திரரும் பத்ரகாளியும் தமது பூத கணங்களுடன் சிவபெருமானை வணங்க, பெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹித்தார். அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போக இங்கேயே தங்கினர் என்கிறது தல புராணம்.

தட்ச சம்ஹாரத்தின் போது, யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் ,தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் .அவர்களின் நிலையை கண்டு இரங்கிய வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது. மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி, “சிவ குமாரனே எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும்” என்று வேண்டினர் .

இன்றளவும் மன நலம் குன்றியோர்,மற்றும் பில்லி,சூன்யம்,ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவதும்,வெண்ணைக்காப்பும் மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் மன நலம் குன்றியோர்,பில்லி சூன்யம் இவைகளால் பாதிக்கப் பட்டோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்வது இங்கு வழக்கத்தில் உள்ளது.  

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வீரபத்திரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் மகாஷ்டமி விரதம் அன்று தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபட, எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP