திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் குருபூஜை இன்று

இன்று 16.07.2018 ஆனி மாதம் 32ம் தேதி, திங்கட்கிழமை. மகம் நட்சத்திரம்.
 | 

திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் குருபூஜை இன்று

இன்று 16.07.2018 ஆனி  மாதம் 32ம் தேதி, திங்கட்கிழமை. மகம் நட்சத்திரம். நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை நாள். திருவண்ணாமலையில் மாணிக்கவாசகருக்கு தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் இந்த திருக்கோயில்  அமைந்துள்ளது. திருவண்ணாமலை தலத்தில் திருவெம்பாவை  பாடல்களை இயற்றினார் மாணிக்கவாசகர். திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்த போதிலும்கூட மாணிக்கவாசகருக்கு தனி இடம் அமையக் காரணம்  இதுவே. 

1. நமச்சிவாய வாழ்க என தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4.குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து, 6. ஆசைப் பத்து, 7. வாழப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட்பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம்,14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம், 21. திருச்சதகம், 22. நீத்தல் விண்ணப்பம், 23. திருப்புலம்பன், 24. பிடித்த பத்து ஆகியவற்றை படைத்தார் மாணிக்கவாசகர்.

பாண்டிய நாடு, சோழ நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இந்த பாடல்களை அவர் பாடி இருந்தார். அங்கு தல யாத்திரை முடித்து விட்டு விருத்தாசலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார். 

அப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார்.
வைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.

ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார்.

 திருவண்ணாமலையில் உள்ள பெண்கள்  திருவெம்பாவை    பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில்தான் திருவண்ணாமலையில் தற்போது அவருக்கான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் குரு பூஜை நாளான  இன்று  திருவண்ணாமலை திருக்கோயிலில் திருவெம்பாவை  பாடல்களை பாடுவார்கள். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாரதனை காட்டப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் அபரிமிதமான பலன்களை பெறலாம். அன்றைய தினம் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையை அந்த தலத்தில் அமர்ந்து பாடி சிவனையும், பார்வதியையும் வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன. எனவே மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால்  வாழ்க்கை வளமாகும்.

திருச்சிற்றம்பலம்....

ஓம் நமச்சிவாயம் வாழ்க...

ஓம் நாதன் தாள் வாழ்க....

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP