கீற்றுக் கொட்டகையே எனக்குப் போதும் – மக்கள் வெம்மை தீர்க்கும் முண்டகக்கண்ணி அம்மன்

கீற்றுக் கொட்டகையே எனக்குப் போதும் – மக்கள் வெம்மை தீர்க்கும் முண்டகக்கண்ணி அம்மன்
 | 

கீற்றுக் கொட்டகையே எனக்குப் போதும்! மக்கள் வெம்மை தீர்க்கும் முண்டகக்கண்ணி அம்மன்

கோவில் என்பது ஆடம்பரமாகவோ, பல அடுக்கு பிராகரங்களைக் கொண்டதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.எளிமையாக இருந்தாலும்,உள்ளே வீற்றிருக்கும் அன்னையானவள் வரப்பிரசாதியாக இருந்தாலே,பூவை நோக்கி வரும் தேனீக்களைப் போல அவள் அடியார்கள் அவளை நாடி வருவார்கள். அந்த வகையில், திருக்கோவில்களின் சங்கமமான மயிலாப்பூரில் கோலோச்சும் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் ஆலயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றிய முண்டகக் கண்ணி அம்மன் இன்று பல லட்சம் மக்களின் மனதில் விருக்ஷமாக நிற்கிறாள். இந்தத் திருத்தலம் நாக தோஷம், மாங்கல்ய தோஷம் மற்றும் ராகு - கேது தோஷத்திற்கான ஆகச் சிறந்த தலமாக விளங்குகிறது. முண்டகம் என்றால் தாமரை மலர் என்று பொருள், கண்ணி என்பதற்கு கண்களை உடையவள் என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் அன்னை முண்டகக் கண்ணி. பெயருக்கு ஏற்றாற்போல் அழகும், அருளும் நிறைந்த அவளின் திருமுகத்தைப் பார்க்க கண் கோடி வேண்டும்.

இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும்,அன்னை வீற்றிருக்கும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகை தான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடை ஏற்பட்ட தாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.

சுயம்பு வடிவ அன்னையின் திருவுருவம் மலர்வதற்கு முந்தைய தாமரை மொட்டின் வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அன்னைக்கு கவசமாக வெள்ளிக் கவசத்தால் போர்த்தப்பட்ட பெரிய பிரபை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்துதலை நாகம் படம் விரித்து நிழல்தரும் கோலத்தில் அமைந்துள்ளது.

அன்னையின் கருவறையின் பின்புறம் தல மரமான விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், அதனுடன் சேர்ந்து புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறது என்பது ஐதீகம். நாகம் இவளை வழிபடுவதால், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அன்னையின் வலதுபுறம் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளனர். நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி நாட்களில் இங்கு அலையென பெண்கள் கூட்டம் அலைமோதும்.நாகக் கன்னிகளுக்கு பாலாபிஷேகமும் தீப ஆராதனைகளும், விசேஷ பூஜைகளும் நடக்கும்.

இத்திருக்கோவிலின் விசேஷமே அன்னைக்கு காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் என பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.அன்னையின் அலங்காரத்தின் போது, அவளின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக பதிய வைத்து, அதிலே தாமரை மலர் போன்ற கண் மலர், நாசி, அதரம் வைத்து, பூமாலை சாற்றி,அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர். அன்னையின் இடதுபுறம் உற்சவர் சன்னிதி உள்ளது. சப்த கன்னியர்களான,மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகிஆகியோர் உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் வீற்றிருக்கின்றனர்.

அம்மை நோய், கண் நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு இவள். வருடந்தோறும் சித்திரைப் புத்தாண்டு பிறப்பு அன்று 108 விளக்கு பூஜை, சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று1,008 பால்குடப் பெருவிழா, அம்மனுக்கு உகந்த ஆடியில் பூரத் திருவிழா, 1,008 கூடையில் பூச்சொரிதல் விழா, விஜயதசமி, தைக் கடைசி வெள்ளி, ஆகிய ஐந்து நாட்களில் அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவதைக் கண்டு களிக்கலாம். தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னையை கண்ணாரக் கண்டு மகிழலாம். அருள்பாலிக்கும் அன்னை முண்டக்கண்னி அம்மனின் ஆலயம் சென்னை மயிலாப்பூரில் கச்சேரி சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP