கீர்த்தனைகளுக்கு இறையருள் கொடுத்த தியாக பிரம்மம் தியாகையர்!

கீர்த்தனைகளுக்கு இறையருள் கொடுத்த தியாக பிரம்மம் தியாகையர்.
 | 

கீர்த்தனைகளுக்கு இறையருள் கொடுத்த தியாக பிரம்மம் தியாகையர்!

கல் தோன்றி மண் தோன்றி, மனிதன் அவதரித்த நாளில் இறைவன், வழிபாடு என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. இறைவனை வழிபடுவதில் இசைக்கு முக்கியத்துவத்தை ஆதி மனிதன் வழி வகுத்தான். பல இசைக்கருவிகள் இயற்கையின் கொடையானது. இசைக்கருவிகளுடன் தனது வேண்டுதல்களை பாடல்களாக இசைத்து தானும் மனம் உருகி இறைவனையும் தனது இசையில் கரையச் செய்தான் மனிதன். 

இசையால் இறைவனை மிக நெருக்கமாக உணர முடியும் என்பதற்கு மிகப்பெரிய சாட்சியாக விளங்குவது தியாகராஜ சுவாமிகள் எனப்படும் தியாகையரின் கீர்த்தனைகள். தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் கர்னாடக இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் தெலுங்கு சமஸ்கிருத மொழியில் அமைந்தாலும் திருவையாறை கடந்து இன்று உலகம் முழுவது போற்றப்படும் பொக்கிஷமாக விளங்குகிறது. தியாகையரின் கீர்த்தனைகள் இல்லாத கச்சேரிகளோ  , கர்நாடக சங்கீதமோ இல்லை என்ற அளவில் அளவில்லாத சக்தி படைத்தது தியாகையர் கீர்த்தனைகள்.

தியாகராஜ சுவாமிகள் (1767 - 1848) திருவாரூரில் திவ்விய நாத பஜனை செய்யும் ஒருவருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார். தனது எட்டாம் வயதில் திருவையாறில்  அவரது தந்தையிடம் காயத்திரி மந்திரம்,ராம தாரக மந்திரம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். தாயிடம் ராமதாசர், புரந்தரர் கீர்த்தனைகளைக் கற்றார். சமஸ்கிருதக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்ததோடு ஜோதிடமும் கற்ற தியாகையர் ,தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜியின் அரசவை வித்வான்  வேங்கட ரமனையாவிடம் சங்கீதம் கற்றார். 

ராம நாமம்  கொடுத்த கீர்த்தனை

தினமும் ராம நாம ஜபம் செய்யும் வழக்கமுள்ளவர் தியாகையர். நாள் ஒன்றுக்கு  லட்சத்து இருபத்தையாயிரம் வீதம் தனது 38  வயதுக்குள் 96  கோடி ராம நாமம் உருவேற்றினார். அப்படி ஒரு முறை உள்ளம் உருகி ஜெபிக்கும்போது கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லக்ஷ்மணர் விசுவாமித்திரர் நடத்திய யாகத்துக்குச் செல்லும் காட்சியைக் கண்டார். "ஏல நீ தயராது" என்ற புகழ் பெற்ற பாடல் தியாகையரின் வார்த்தைகளாக வெளிப்பட்டது.

தியாகையரின் தந்தை இறந்தபின் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு சகோதரர்கள் அவரை விரட்டி விட்டனர். ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு கூரை வீட்டில் குடியேறினார். அங்கு உஞ்ச விருத்தி செய்து வாழ்ந்து வந்தார்.

கோபம் வேண்டாமே - "சாந்த முலேக சவுக்கியமுலேது"  

ஒரு முறை சீடன் ஒருவனைக் கோபித்தபோது, 'ராம நாமத்தை உச்சரிக்கும் வாயால் கோப வார்த்தைகளைப் பேசக் கூடாது' என்ற மனைவியின் பேச்சைக் கேட்டு தவறை உணர்ந்தவராய், "சாந்த முலேக சவுக்கியமுலேது"  என்றப் பாடலைப் பாடினார். மனைவியின் தூண்டுதல் பேரில் "சம்போ மகாதேவ", "சிவே பாஹிமாம்" போன்ற மற்றக் கடவுளரையும் துதிக்கும் பாடல்களை இயற்றினார்.

தியாகையரின்  பக்தி கீர்த்தனைகள் பரவலாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பொறாமை கொண்ட  மூத்த சகோதரன் அவர் எழுதி வைத்திருந்த சுவடிகளை எரித்ததுமின்றி ராம விக்ரகத்தை காவிரியில் எறிந்து விட்டான்.  மிக வருந்திய தியாகையர் ராமனிடமே முறையிட்டார்.

அந்த நாள் பொழுதில் தியாகையர் கனவில் ஆற்று மணலில் விக்ரகம் புதைந்துக் கிடப்பது தெரிய வந்தது.இதனால்  மனதில் உற்சாக வெள்ளம் கரை புரள  மீதூர தொரிகிதுவோ" (நீ எப்படி மீண்டும் கிடைத்தாயோ) என கீர்த்தனையால் தன்னை வெளிப்படுத்தினார்.

சரபோஜி மன்னன் தன்னைக் குறித்துப் பாடக் கேட்டபோது மறுத்து, "நிதி சால சுகமா? ராமுனி சந்நிதி சேவசுகமா?" என இவர் பாட, சரபோஜியே மாறுவேடத்தில் நின்று அதை ரசித்தாராம்! இதைப் போலவே திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாளில் அழைக்க, பாட மறுத்த பக்திமான் இவர். திருப்பதி, காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் இவரது இசை மழைப் பொழிந்துள்ளது.  இறந்த ஒருவனை கீர்த்தனைப் பாடி உயிர் பெறவும் செய்துள்ளார்  தியாகையர்.

பத்து நாட்களுக்கு முன்பே தாம் இறைவனை அடையப் போவதாகக் கனவு கண்டார்.  இதனை "கிருபை நெல" என்ற கிருதியில் விவரித்தார்.

‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் தனது 80-வது வயதில் (1847) பகுள பஞ்சமி தினமொன்றில் பஜனைகளைக் கேட்டவாறே சித்தியடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திருவையாறில் காவிரி நதிக்கரையில் பெங்களூர் நாகம்மா என்பவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து  இருபத்தி ஐந்தாம் ஆண்டு  சமாதி ஒன்றை கட்டினார். இன்றைக்கும் ஒவ்வொரு ஆண்டும்  தியாகையர் சமாதியில் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அவருக்கு 

"தியாகராஜ ஆராதனை"  என்ற இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP