ஸ்ரீரங்கம் - புண்ணியம் தரும் பூலோக வைகுண்டம்

வைகுண்ட ஏகாதசியன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் வழிபாடு சிறப்பாக இருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் ஸ்ரீரங்கம்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
 | 

ஸ்ரீரங்கம் -  புண்ணியம் தரும் பூலோக வைகுண்டம்

ஒவ்வொரு மாதமும்  அமாவாசை  அடுத்த 11 நாட்களில் வளர்பிறையிலும், பெளர்ணமி அடுத்த 11 நாட்களில் தேய்பிறையிலும் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசி விரதத்திலும்  ஒரு பலனை அடையும் பக்தர்கள்  அதனூடே வைகுண்டப் பதவி அடையும் மோட்சத்தையும் உடன் பெறுகிறார்கள். அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி  வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நமக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்தான். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்று சொல்வார்கள். மார்கழி மாதம் விஷ்ணு பகவான் அறிதுயிலில் இருந்து  விழித்தெழும் மாதம். ஏகாதசியன்று மகாவிஷ்ணுவை  வேண்டி விரதமிருந்து வழி படுவோருக்கு செல்வமும், புகழும் செழித்தோங்கும் . இவர்களுக்கு வைகுண்ட வாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில்  சொல்லப்பட்டிருக்கின்றன. விஷ்ணுபுராணத்தில் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்துபெறும் பயனை மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட  ஏகாதசியன்று ஒருநாள் இருந்தாலே பெறலாம் என்று கூறுமளவுக்கு  வைகுண்ட ஏகாதசி யின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை விளக்கங்களை கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு நிகழ்த்தியதும் இந்நாளில்தான்.

வைகுண்ட ஏகாதசியன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும்  வழிபாடு சிறப்பாக இருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம்   என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் ஸ்ரீரங்கம்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். திருச்சி, ஸ்ரீரங்கம் பெரிய கோயில் என்றும், சொர்க்க பூமிஎன்றும் பக்தர்களால் பக்தி பரவசத்தோடு அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி  விழா. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பகல் பத்து,  இராப்பத்து என 21 நாள்கள் விமரிசையாக தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பிரவேசிப்பார். இந்தாண்டு  வைகுண்ட ஏகாதசி விழா இன்று (07-12-2018) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

முதல் நாள் பகல் விழா தொடங்கும் போது நம்பெருமாள்  அர்ச்சுன மண்டபத்தில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவிருக்கிறார். பகல் பத்தின் இறுதி நாளான 17 ஆம் தேதியன்று  பெருமாள் மோகினி அலங்காரத்தில்  எழுந்தருளி அருள் புரியவிருக்கிறார். அதைத் தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பரமபத வாசல் திறப்பு 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.  அதிகாலை 5.30 மணி அளவில் ரத்தினஅங்கியில் பக்தர்களுக்கு  அருள்புரிந்தபடி விருச்சிக லக்கினத்தில் புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக  திருக்கொட்டகைக்குள் பிரவேசிக்கிறார். வருடத்துக்கு  ஒருமுறை மட்டுமே பெருமாள் ரத்தின அங்கியில் காட்சித்தருவார் என்பதால் பெருமாளைக் காணகண் கோடி வேண்டும். அதனால்தான் பெருமாளின் இந்தத் தோற்றத்தைக் காண உலகின் பல்வேறு இடங்களிலிருந்து விஷ்ணுபக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்குப் படையெடுப்பார்கள்.

பக்தர்கள்  பெருமாளைத் தரிசனம் செய்யும் வகையில் ஆலயத்துக்குள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பகல்பத்து விழாவில்  அர்ச்சுணமண்டபத்துக்குள்  காட்சி தரும் பெருமாள், இராப்பத்து விழாவின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி  காட்சித் தருவார். இராப்பத்து விழாவின்  முக்கிய நிகழ்வுகளில் திருக்கைத்தல சேவை,திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி, தீர்த்தவாரி, நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறவிருக்கிறது.

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவில் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் மூலவர் நம்பெருமாள் முதல் 11 நாட்கள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.  ஏகாதசி என்பது ஏகாந்தமானது. அதிலும் ஏகாந்தமான வைகுண்ட ஏகாதசியன்று எம்பெருமானை வழிபடுவதன் மூலம் எல்லா வளமும் பெறுவதோடு வைகுண்ட பதவியையும் பெறுவோம். 

ஓம் நமோ நாரயணாய... 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP