ஆன்மீக கதை - பக்தியின் எல்லை எதுவரை….?

ஆன்மீக கதை - பக்தியின் எல்லை எதுவரை….?
 | 

ஆன்மீக கதை - பக்தியின் எல்லை எதுவரை….?

ஒரு முறை மஹாவிஷ்ணுவும், லஷ்மிதேவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். சுவாமி உங்கள் பக்தர்கள் எல்லோரும் உங்களை நம்புகிறார்களா? என்று கேட்டாள். அதிலென்ன சந்தேகம் தேவி.. எல்லோருக்கும் என் மீது நம்பிக்கை இருப்பதால் தான் எப்போதும் என்னை வழிபடுகின்றனர் என்றார். ஆனாலும்  லஷ்மிக்கு சந்தேகம் தீரவில்லை. அவள் முகத்தில் இருந்த குழப்பத்தைத் தீர்க்க வேண்டும் என்று மகாவிஷ்ணு முடிவுசெய்தார்.

பூலோகத்தில் பூவரசனூர் என்னும் ஊரில் விஷ்ணு பக்தன் ஒருவன் இருந்தான். எந்த நேரமும் நாராயணா.. நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பான். எந்த வேலை செய்தாலும் கடவுளை வணங்கி செய்பவர்கள் உண்டு. இவன் நேர்மாறாக வேலை முடியும் தருவாய் வரை நாராயணாவைப் பற்றிக் கொள்வான். நாராயணா என்று சொல்லும் நாவால் நல்லதை மட்டும் பேசவேண்டும். நல்லதை மட்டும் நினைக்க வேண்டும் என்று நினைப்பவன்.

அதற்கு காரணமும் நிறைய உண்டு. சிறுவயதில் அவனுக்கு புலால் உணவின் மீது அதிக நாட்டம் இருந்தது. அவனது பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் நாள் தோறும் புலால் வகைகளை மட்டுமே உண்டு வந்தான். கடவுளின்  பெயரை சொன்னாலும் அவர் தருமத்தின் வழியில் தான் வாழ சொல்லியிருக்கிறார் என்று மேற்கொண்டு பேசவிட மாட்டான். இறுதியில் பெற்றோர்கள் அவனிடம் இனிமேல் புலால் உண்பதை நிறுத்து என்று சொல்ல மாட்டோம். ஆனால் இறைவன் எங்களை அழைத்துக் கொள்ளும்போது நீ இதை நிறுத்தி விடவேண்டும் என்றனர். சிறிதுநேரம் யோசித்தான். அதுதான் உங்கள் விருப்பம் என்றால் அதன்படி நடக்கிறேன். ஆனால் உங்களை விட மாமிச உணவு பெரிதல்ல என்றான். பெற்றோர்கள் அளவில்லா ஆனந்தமடைந்தார்கள்.  ஆண்டவன் மீது தாங்கள் கொண்ட அளவு கடந்த நம்பிக்கை இது என்று பூரிப்படைந்தனர். ஆனால் மகிழ்ச்சியுடன் உறங்கியவர்கள் அடுத்த நாள் இறைவனடி சேர்ந்தனர்.

உலகம் இன்னது என்று அறிந்து கொள்ளும் அரைகுறை வயதில் கடவுளின் இத்தகைய செயல் அவனை பக்குவமடையசெய்தது. நாராயணா இந்த வயதில் என்னை தவிக்கவிட்டாயே என்று எண்ணாமல் உன்னை மட்டுமே நினைக்க செய்ய இப்படி ஒரு பிறவி எனக்குத் தேவைதான் என்று எண்ணினான்.தன்னிடம் இருந்த உடைமைகள், பொருள்கள் அனைத்தையும் இல்லாதவருக்கு கொடுத்துவிட்டு அன்றாட பணிசெய்து வந்தான். தனது தேவைக்கு போக எஞ்சியவற்றையும் இல்லாதவருக்கு கொடுத்து வந்தான். கடவுளின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அது தனக்கு நன்மைதான் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தான். அவன் நினைவு லஷ்மிக்கு வந்தது. நாராயணா... நாராயணா என்னும் நாமத்தை ஓயாது சொல்கிறானே இவனுக்கு உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். அவன் பெற்றோரை விரைவிலேயே அழைத்துக்கொண்டீர்கள் என்ற பயம்தான் உங்களை நினைக்க வைக்கிறது என்பதுதான் உண்மை என்று  சீண்டினாள் லஷ்மிதேவி. அதோடு விஷயம் முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றியே பேசினாள். கரைப்பார் கரைய கரைய  கல்லும் கரையும் என்பது கடவுளுக்கும் பொருந்தியதோ எண்ணவோ. ஸ்ரீமந் நாராயணனுக்கும் இதைப் பற்றி சந்தேகம் துளிர்விட்டது. உடனடியாக தாமதிக்காமல் களத்தில் இறங்கினார். 

அனைத்தையும் இழந்து தவித்தவனுக்கு ஆறுதலாக இருந்தது ஸ்ரீமந்நாராயணா என்ற வார்த்தை தான். ஆனால் அன்றைய விடியலில் அவனுக்கு ஏற்பட்ட காய்ச்சலில் பேச்சுத் திறன் வலுவிழந்துவிட்டது. ஆனாலும் நாரயாணனின் நாமத்தை உதடுகள் உச்சரிக்க கைகள் நாராயணனின் உருவபடத்தைக் கட்டிப்பிடித்திருந்தது. ஆனாலும் லஷ்மிதேவி சமாதானமாகவில்லை. இப்போதும் பயத்தின் காரணமாகத் தான் உங்களைப் பற்றியிருக்கிறான் என்றாள். இதற்கும் ஒருவழியுண்டு தேவி என்றவர் அடுத்த ஆயுதத்தை பிரயோகித்தார். அவன் அன்றாடப் பணியை மேற்கொள்ள விடாமல் செய்வதற்கு ஏற்ப அவன் கை கால்களை செயலிழக்கச் செய்தார். இதுவும் நாராயணனின் லீலை தான் என்றவன் நாராயணனின் உருவப்படத்தைத் தழுவாத கைகளால் என்ன பயன் என்று உண்ணாமல், உறங்காமல் உதடுகளில் நாராயண நாமம் ஜபித்தப்படி உயிரையும் உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று மானசீகமாக வழிபட தவறை உணர்ந்த மகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனுடன் அவன் முன் தோன்றி அவனை நோயின் பிடியிலிருந்து மீட்டாள். 

இப்போது உனக்கு மகிழ்ச்சிதானே.. இனி அரசனாக எல்லா பேறுகளும் பெற்று சிறப்பாக வாழ்ந்து எம்மிடம் ஐக்கியமாவாய் என்றார் நாராயணன். இல்லை சுவாமி.. எப்போது உங்களின் பாதத்தில் அடியேனது ஆன்மா இளைப்பாறுகிறதோ அப்போது தான் இப்பிறவியின் பயனை நான் அடைந்ததாக மகிழ்ச்சியுறுவேன். எனக்கு உலக வாழ்க்கை வேண்டாம்.  உங்களைப் பார்த்த இக்கணம் நான் அளவில்லா பேறுகளைப் பெற்றுவிட்டேன் என்று அவன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். மகாவிஷ்ணு புன்னகையால் தேவியைப் பார்த்தார். உங்கள் பக்தனை சந்தேகித்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டாள் லஷ்மிதேவியும். பக்தியின் எல்லை எதுவரையென்றால் இறைவனின் பாதத்தில் இளைப்பாறும் வரைதான் என்பதை  ஒவ்வொரு பக்தனும் புரிந்து கொள்ள வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP