ஆன்மீக கதை – இறைவனே என்றாலும்...

பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன.அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார்.அப்படியொரு வரம் அவரிடம் இருந்தாலும் கருவூர் சித்தர் அதை ஒருமுறை கூட பரிசோதித்து பார்த்ததில்லை.
 | 

ஆன்மீக கதை – இறைவனே என்றாலும்...

பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன.அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார்.அப்படியொரு வரம் அவரிடம் இருந்தாலும் கருவூர் சித்தர் அதை ஒருமுறை கூட பரிசோதித்து பார்த்ததில்லை.

கருவூர் சித்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திற்குச் சென்றார்.அவர் சென்ற வேளையில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் தங்களை மறந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.அந்தக் கூட்டத்திற்கு இடையில் நின்ற கருவூர் சித்தருக்கு, இறைவனின் திருவுருவம் தெரியவில்லை.

எனவே அவர் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி இறைவனைத் தனக்குக் காட்சியளிக்கச் செய்யலாம் என்று நினைத்தார்.பின்னர் ‘நெல்லையப்பரே! என் முன்னால் வந்து எனக்குக் காட்சி தாருங்கள்’ என்று வேண்டினார்.அவருடைய அழைப்பு இறைவனுக்குக் கேட்ட போதும், கோவிலில் இறைவழிபாடு நடந்து கொண்டிருந்ததால், இறைவனால் அவருக்குக் காட்சியளிக்கவோ, பதில் சொல்லவோ முடியவில்லை.சித்தரும் பல முறை அழைத்துப் பார்த்தும், இறைவன் தரிசனம் அளிக்காததால் கோவிலுக்குள் இருந்து வெளியேறினார்.

கோவிலுக்கு வெளியே வந்த அவர், ‘நான் பலமுறை அழைத்தும் இறைவன் எனக்குக் காட்சி யளிக்கவில்லை.இங்கு இறைவன் இல்லை போலும். எனவே இறைவன் இல்லாத இந்த இடத்தில் குருக்கும், எருக்கும் எழுக’ என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து அகன்றார்.பின்னர் கருவூர் சித்தர், திருநெல்வேலிக்கு வடக்கே இருக்கும் மானூர் எனும் இடத்திற்குச் சென்றார்.அங்கு சிவபெருமானை, நடராஜர் உருவில் வழிபட்டுக் கொண்டிருந்த அம்பலவாணர் என்ற முனிவரைச் சந்தித்தார்.அப்போது தான் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றதையும், பலமுறை அழைத்தும் இறைவன் வராததையும், அதனால் தான் கொடுத்த சாபத்தையும் சொல்லி வருந்தினார்.

அம்பலவாண முனிவர், ‘சித்தரே! வருத்தப்படாதீர்கள், தாங்கள் அழைத்த நேரத்தில், இறைவன் வரமுடியாத சூழ்நிலையில் இருந்திருக்கலாம். தாமதமானாலும், தாமாகவே தங்களைத் தேடி வந்து அவர் தங்களுக்குக் காட்சியளிப்பார். ஆகையால் தாங்கள் சாபம் கொடுத்திருக்க வேண்டியதில்லை’ என்று ஆறுதல் சொன்னார்.கருவூர் சித்தரும், ‘உண்மைதான் முனிவரே! எனக்கு ஏன் அப்படியொரு கோபம் ஏற்பட்டதென்றே தெரியவில்லை’ என்று வருத்தப்பட்டார். பின்னர் கருவூர் சித்தர், அம்பலவாண முனிவரின் இருப்பிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு முடிந்தது. இதையடுத்து சிவபெருமான், கருவூர் சித்தரைக் கண்டு, அவரைச் சமாதானப் படுத்தி, சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக மானூர் நோக்கிச் சென்றார்.இறைவன் கோவிலை விட்டு வெளியேறியதும், கருவூர் சித்தர் கொடுத்த சாபத்தின்படி கோவில் வளாகத்திற்குள் பிரமதனச் செடிகளும், எருக்கு செடிகளும் முளைக்கத் தொடங்கின.

மானூர் வந்த இறைவன், தன்னைப் பல ஆண்டுகளாக நடராசர் உருவில் வழிபட்டு வரும் அம்பலவாண முனிவர் முன்பு, அவர் விரும்பும் நடராசர் உருவில் காட்சியளித்தார்.இந்தக் காட்சியைக் கண்ட அம்பலவாண முனிவர் மனமுருகினார். ‘இறைவா! தங்களின் திருவுருவக் காட்சி காண வேண்டுமென்று பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன்.இன்று நான் விரும்பிய உருவத்திலேயே எனக்குக் காட்சி யளித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனக்குக் காட்சியளித்த இந்த இடத்தில் கோவில் கொண்டு அருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இறைவனும், ‘முனிவரே, தங்கள் விருப்பப்படி இங்கு கோவில் கொள்ளும் நான், உங்கள் பெயரைக் கொண்டே அம்பலவாணர் என்று அழைக்கப்படுவேன். இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வேண்டியதைக் கொடுத்தருள்வேன்’ என்றார். அதைக் கேட்ட முனிவரும் மகிழ்ச்சியடைந்து அவரை வணங்கினார்.

அதைத் தொடர்ந்து கருவூர் சித்தருக்கும், இறைவி காந்திமதியுடன் சேர்ந்து இறைவன் காட்சியளித்தார். தன் முன் காட்சி தந்த இறைவனையும் இறைவியையும் வணங்கிய சித்தர், ‘இறைவனே, திருநெல்வேலிக்குத் தங்களைக் காண வந்த போது, எனக்குக் காட்சியளிக்காமல் அனுப்பி விட்டீர்களே என்று வருந்தினேன்.ஆனால், தற்போது நானிருக்கும் இடத்திற்கே இறைவியோடு சேர்ந்து வந்து காட்சி தந்து என்னைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்’ என்று சொல்லி மகிழ்ந்தார்.‘சித்தரே! தாங்கள் என்னைக் காண வேண்டும் என்று அழைத்த வேளையில், அங்கு எனக்குச் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்ததைத் தாங்களும் அறிவீர்கள்.

"நான் தங்களுக்குக் காட்சியளிக்க வந்திருந்தால், எனக்காக அவர்கள் செய்த வழிபாட்டைப் புறக் கணித்ததாகி விடும்.அந்த வழிபாடு முடிந்த பின்பு, தங்களுக்குத் தனியாகக் காட்சியளிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.அதற்குள் தாங்கள் கோபம் கொண்டு சாபம் கொடுத்து விட்டு வந்து விட்டீர்கள்"என்று விளக்கம் அளித்தார் இறைவன்.

சித்தரோ,"இறைவா! தங்களைக் காண வேண்டும் என்று பலரும் வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில், என் ஒருவனுக்கு மட்டும் தாங்கள் காட்சியளிக்க வேண்டும் என்று நினைத்துத் தவறு செய்து விட்டேன்.அந்தத் தவறுடன் கோபத்தில் சாபம் ஒன்றையும் கொடுத்துப் பெருந்தவறு செய்து விட்டேன். என்னுடைய தவறுகளைப் பொறுத்து, என்னை மன்னித்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.‘சித்தரே! தாங்கள் செய்ததில் தவறு ஏதுமில்லை, தங்கள் விருப்பத்தில் ஏற்பட்ட காலதாமதம் தங்களைக் கோபமடையச் செய்து விட்டது.

கோபத்தில் தாங்கள் கொடுத்த சாபத்தைத் தாங்கள்தான் மாற்றியருள வேண்டும். இதற்காகத் தாங்கள் மீண்டும் திருநெல்வேலிக்குத் திரும்பி வர வேண்டும்’ என்று அழைத்தார் சிவபெருமான்.சித்தரும் அப்படியே செய்வதாகச் சொன்னார். இதையடுத்து இறைவனும், இறைவியும் அங்கிருந்து மறைந்தனர்.

கருவூர் சித்தர் மானூரிலிருந்து திருநெல்வேலிக்குத் திரும்பிச் சென்றார். அங்கு நெல்லையப்பர் கோவில் முன்பாக நின்று, ‘இங்கு இறைவன் இருக்கிறார், இங்கிருக்கும் குருக்கும் எருக்கும் அறுக’ என்று சொல்லி சாப விமோசனமளித்தார்.அவர் அப்படிச் சொன்னதும், கோயிலுக்குள் முளைத் திருந்த பிரமதனச் செடிகளும், எருக்கு செடிகளும் மறைந்தன.அதனைக் கண்டு மகிழ்ந்த கருவூர் சித்தர், கோவிலுக்குள் சென்று இறைவனைப் போற்றிப் பாடி வழிபட்டார். பின்னர் அங்கிருந்து தனது சிவாலயப் பயணத்தைத் தொடர்வதற்காக அடுத்த ஊருக்குச் சென்றார்.

இறைவன் ஒரு செயலை செய்கிறார் என்றால்,அதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா?. அடுத்தவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியாமல், தான் நினைத்தது நடக்கவில்லையே என்று அவர்கள் மேல் உடனடியாகக் கோபமடைவது தவறு என்பதும், தனது பக்தனுக்குச் சொன்னதைச் செய்ய முடியாமல் போனால், இறைவனாகவே இருந்தாலும் பக்தனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் இந்த உலகம் அறிய வேண்டியே இறைவன் இந்த நாடகத்தை நிகழ்த்தினான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP