ஆன்மீக கதை - நம் எண்ணங்கள் வலியது

நம் எண்ணங்கள் வலியது. நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்பதை உணர்ந்து இறைவனை வழிபடுவோம்.
 | 

ஆன்மீக கதை - நம் எண்ணங்கள் வலியது

இறைவன் அன்புக்கு அடிபணிந்தவன். கறந்த பாலைவிட தூய்மையான அன்பை நாம் அவன் மீது செலுத்தும்போது நாம் அவனுக்கு மிக முக்கியமான பக்தன் ஆகிறோம்.கோடானு கோடி மக்களை பெற்றிருக்கும் இறைவனுக்கு எல்லோரும்  ஒன்றுதான். இறைவனை நோக்கி வரம் வேண்டி தவம் புரிபவன் பக்தியில் தூய்மையாகவும் உள்ளத்தில் தெளிவையும் கொண்டால் போதும்.வேண்டியதை இறைவன் அப்படியே வழங்கி அருள்புரிவார்.இரண்டு பக்தர்கள் இறைவனை வேண்டி அடைந்த பலன்களைப் பார்க்கலாம்.

முதலாமவன் பெரும் கஞ்சன். சாப்பிடும் போது கூட வயிறார சாப்பிடமாட்டான். செல்வம் நிறைந்திருந்தாலும் வயிற்றுக்கே வஞ்சனை செய்பவன். ஆடைகள் அணிவதிலும், இன்ன பிற செலவுகளையும் கூட வழித்து வழித்து செய்வான்.எச்சில் கையால் காகம் கூட ஓட்டாதவன். பெட்டி நிறைய செல்வம் வழிந்த நிலையில் அவனுக்கு விபரீத ஆசை உருவானது.வீடு முழுக்க தங்கத்தாலும் வைரத்தாலும் இழைத்து அதில் வாழ்ந்தால் எப்படியிருக்கும்.கற்பனையைத் தினமும் கனவுகளாகக் கண்டான்.கனவை நனவாக்க என்ன செய்வது என்று யோசித்தான்.நம் கனவையெல்லாம் கடவுளால் மட்டுமே தீர்க்க முடியும் என்று இறைவனை நினைத்து தவம் இருக்க முடிவு செய்தான். ஏற்கனவே கஞ்சக் கருமி என்பதால் அவனுக்கு தவம் இருப்பது ஒன்றும் பிரச்னையாக இருக்கவில்லை. கடவுள் ஒன்றும் அறியாதவரா… அவனுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவனை அதிகம் காக்க வைக்காமல் அவன் முன் தோன்றினார்.

அவனுக்கு ஒரே சந்தோஷம்.“என்ன வேண்டும் கேள்.ஆனால் ஒரு வரம் மட்டுமே கொடுப்பேன்.அதை மீண்டும் மாற்றித்தர இயலாது.உனக்கு ஒரு நிமிடம் அவகாசம்” என்றார். அவன் மனம் முழுக்க தங்கமாக இருந்ததால், “நான் எந்தப் பொருளைத் தொட்டாலும் அது உடனே தங்கமாக மாறவேண்டும்” என்றான்.“நன்றாக யோசித்தாயா” என்றார் இறைவன். “என்ன சாமி இதைத் தானே எந்த நேரமும் நினைச்சுட்டிருக்கேன் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் நீங்க இந்த வரம் மட்டும் கொடுங்க சாமி” என்றான்.புன்னகைத்த கடவுள் விதி வலியது என்று சொல்லி அப்படியே ஆகட்டும் என்று வரமளித்து மறைந்தார். நம்மாள் வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போகும்போது கூட வழியில் யாரையும் தொடவில்லை. தங்கம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தனித்து வீட்டுக்கு வந்தான். கடவுள் உண்மையிலேயே வரம் கொடுத்துவிட்டாரா என்று வீட்டில் இருந்த உப்பு டப்பாவை தொட்டான். தங்கமாக மின்னிற்று. உற்சாகத்தில் மனைவியைக் கட்டிப்பிடித்தான் அவளும் தங்கமாகிவிட்டாள். வெளியே இருந்து ஒடி வந்த குழந்தை இவனைக் கண்டதும் அப்பா என்று தோள் மீது எம்பியது. பதட்டத்தில் இவன் தள்ளிவிட குழந்தையும் தங்கமாயிற்று.“ஐயோ தப்பு செய்து விட்டேனே… வேண்டியதையும், தேவைக்கும் மட்டுமே தங்கமாக்க செய் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். . இனி நம்மால் தண்ணீரைக் கூட குடிக்க  முடியாதே.இனி என்ன செய்வேன்..பகிர்ந்து கொடுக்காத நமக்கு பகவான் கொடுத்த இந்தத் தண்டனை தேவைதான்” என்று நொந்துகொண்டான்.இனி அவன் என்ன ஆனான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..

இரண்டாமவன் வறுமைக்கு பிறந்தவன்.சோறு என்ற வார்த்தைக் கூட செல்வந்தர்களுக்குத்தான் என்று நினைப்பவன்.எப்படியும் பட்டினியில்தான் இருக்கிறோம்.கடவுள் காரணமின்றி நம்மை படைத்திருக்க மாட்டார். பசியால் போகிற உயிர் பகவானுக்காகவாது போகட்டும் என்று தவமிருந்தான். இவனது நிலையைக் கண்டு மனமிறங்கிய இறைவன் இவன் முன் தோன்றி முதலாமவனிடம் சொன்னது போலவே இவனிடம் ஒரு வரம் மட்டும் என்றார். இவனும் சரி என்று ஒப்புக்கொண்டு நான்… 10 அடுக்கு மாளிகையில் என் மனைவி தங்கக் கிண்ணத்தில் என் மழலைச் செல்வத்துக்கு உணவூட்டுவதை அனுதினமும் பார்த்து ரசித்து என் உழைப்பை உலகுக்கு நிரூபிக்க வேண்டுமென்று கேட்டான். அவனது பக்தியையும், அறிவையும் மெச்சிய கடவுள் அப்படியே ஆகட்டும் என்று வரமளித்து மறைந்தார்.

நம் எண்ணங்கள் வலியது. நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்பதை உணர்ந்து இறைவனை வழிபடுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP